கனமழை எச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை அதிகாரிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக இன்று ஆரஞ்சு அலர்ட் நாளை ரெட் அலர்ட் என்கிற அறிவிப்பை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடந்தது.
இதில் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் காயத்ரி கிருஷ்ணன் ஐஏ எஸ் இணைய வழியாக அனைத்து துறை அலுவலர்களிடம் முன்னேற்பாடு பணிகள் குறித்து கேட்டறிந்து,உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த அறிவுரையும் வழங்கினார்.பின்னர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது
மாவட்ட ஆட்சியர் கூறியது என்ன?
திருவாரூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகளாக 176 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளது. இதில் 41 பகுதிகள் அதிகம் பாதிக்க கூடிய பகுதிகள்,68 பகுதிகள் மிதமான பகுதிகள்,67 பகுதிகள் குறைவாக பாதிக்க கூடிய பகுதிகள் என் கண்டறியப்பட்டு தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் 235 நிவாரண முகாம்கள் அமைத்திட முன்ஏற்பாடு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பாதிக்கக்கூ டிய பகுதிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள தேவையான முன்னேற்பாடு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக இன்று ஆரஞ்சு அலர்ட், நாளை ரெட் அலர்ட் செய்யப்பட்டுள்ளது. எந்த பேரிடர் ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் அலுவலகம் அறிவுறுத்தல்
கன மழை பெய்யும்போது தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என்று தேவையானவற்றை முன் கூட்டியே வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளுமாறும், மழை தொடர்பான பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட நிர்வாக உதவி மையத்திற்கு அழைத்து உதவி கேட்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் வெள்ளம் ஏற்படும் என்று கணிக்கப்பட்ட இடங்களில் மீட்பு குழுவினர் தயாராக இருக்கின்றனர் என்றும் மாவட்ட மக்கள் எதற்கும் அச்சப்பட வேண்டாம் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்