தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் ரூ.1,500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளர் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசார் கைது செய்தனர். லஞ்சம் வாங்க உடந்தையாக இருந்த தரகரும் சிக்கினார்.

Continues below advertisement


தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் பாலமுருகன் (36). இவர் தனது தாயார் கட்டிய வீட்டுக்கு மின் இணைப்பு பெற்றிருந்தார். அந்த மின் இணைப்பு வணிக பயன்பாட்டில் இருந்தது. அதனை வீட்டு உபயோக பயன்பாடாக மாற்றித் தருமாறு, அய்யம்பேட்டையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தார்.
 
இதையடுத்து மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளரான பா.மணிகண்டன்(45), மின் கட்டண விகித பட்டியலை மாற்றித் தர  பாலமுருகனிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் பாலமுருகனுக்கு லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லை. அதனால் தஞ்சாவூர் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.


கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசாரின் அறிவுரையின்படி இன்று அய்யம்பேட்டையில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு சென்ற பாலமுருகன் லஞ்ச பணம் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அப்போது மணிகண்டன், அலுவலகத்துக்கு வெளியே நிற்கும் அய்யம்பேட்டையைச் சேர்ந்த தகரரும், மின்வாரிய ஒப்பந்ததாருமான எஸ்.சுதாகர் (44) என்பவரிடம் லஞ்சம் ரூ.1500 கொடுக்குமாறு கூறியுள்ளார்.


தொடர்ந்து பாலமுருகன் ரூ.1500 லஞ்ச பணத்தை சுதாகரிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி வி.ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் பி.பத்மாவதி, ஆர்.அருண்பிரசாத், எம்.சரவணன் மற்றும் குழுவினர் சுதாகரை பிடித்தனர். பின்னர் சுதாகர் கொடுத்த தகவலின்படி மணிகண்டனையும் போலீஸார் கைது செய்தனர்.


கைது செய்யப்பட்ட இருவரும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட மணிகண்டனின் சொந்த ஊர் கள்ளக்குறிச்சி மாவட்டமாகும். தற்போது அவர் தஞ்சாவூர் அருளானந்த நகரில் வசித்து வருகிறார்.