திருவாரூரில் உணவகங்களுக்கு அனுப்பவிருந்த தரமற்ற 60 கிலோ சிக்கனை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.


தமிழகம் முழுவதும் உணவகங்களில் தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்ததன் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படந்ததை யடுத்து உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் உணவகங்கள் மற்றும் இறைச்சி விற்பனை செய்யும் கடைகள் என அனைத்து இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கேரள மாநிலத்தில் சவர்மா உட்கொண்டு ஏராளமான மாணவர்களும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர் இதில் ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில் தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் தரமற்ற சிக்கனை பயன்படுத்தி சவர்மா செய்ததன் விளைவாக அதனை உட்கொண்ட மாணவர்கள் உட்பட பொதுமக்கள் பலர் பாதி படைந்தனர். மேலும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உணவகத்தில் பிரியாணி சாப்பிட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு 41 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 




இதனையடுத்து திருவாரூர் நகர பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் இறைச்சி விற்பனை செய்யும் கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளான மாவட்ட நியமன அலுவலர் புஷ்பராஜ் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அழகிரி காலனி என்கிற பகுதியில் சிலம்பரசன் என்பவரது வீட்டின் பின்புறத்தில் உரிய அனுமதியின்றி தரமற்ற பேக்கிங் செய்யப்பட்ட 60 கிலோ சிக்கன் திருவாரூரில் உள்ள உணவுவகங்களுக்கு சமைப்பதற்கு அனுப்பப்படவிருந்த நிலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சிக்கன் கண்டுபிடிக்கப்பட்டது. 


இதனை அடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த சிக்கனை பறிமுதல் செய்ததுடன் உணவு பாதுகாப்பு தர சட்டத்தின் அடிப்படையில் சிலம்பரசன் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சிக்கன் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் அழிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 




இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அனைத்து உணவகங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கும் இடங்கள் என அனைத்து இடங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும் அதிகாரிகள் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அனைத்து உணவக உரிமையாளர்கள் உடன் ஆய்வுக்கூட்டம் மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் மேலும் தரமற்ற உணவுப் பொருட்களை யார் விற்பனை செய்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.