பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னர் முதல் மனைவியை பார்க்க வந்தவருடன் பிரச்னை செய்து மண்வெட்டியால் தாக்க முயன்ற தந்தையை தனது எதிர்காலம் குறித்து கூட யோசித்து பார்க்காமல் தாயை காப்பாற்ற தன் நண்பர்களுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொலை செய்த மகன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் அருகே குடும்பத் தகராறில் தாயை தாக்க வந்த தந்தையை அரிவாளால் வெட்டிக் கொன்ற மகன் உட்பட அவரது நண்பர்கள் என மொத்தம் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை ஈ.பி. காலனி அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் கரும்பாயிரம் (46). இவர் திருப்பூரில் கட்டடத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். இவருக்கு இரு மனைவிகள். இவர்களில் முதல் மனைவி ராதிகா (38). இவர் தனது மகன்கள் ஜீவா (23) (மீன் வெட்டும் தொழிலாளி). விக்ரம் (20). (ஷூக்கடை பணியாளர்.) ஆகியோருடன் அன்னை சத்யா நகரில் வசித்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளாக திருப்பூரில் இரண்டாவது மனைவி சிவசங்கரி (36) உடன் கரும்பாயிரம் வசித்து வந்தார். கரும்பாயிரத்தின் இரண்டாவது மனைவிக்கு இரு மகள்கள் உள்ளனர். இத்தனை ஆண்டுகளாக தனது முதல் மனைவி பற்றி எவ்வித அக்கறையும் இல்லாமல் இருந்துள்ளார் கரும்பாயிரம்.
ராதிகாவும் தன் மகன்களை சிரமப்பட்டு வளர்த்து வந்துள்ளார். இருவரும் தற்போது வேலைக்கு சென்று வருகின்றனர். இருவருக்கும் தங்களின் தாய் மீது அளவு கடந்த பிரியம் என்று அக்கம் பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு பிறகு ராதிகா வீட்டுக்கு கரும்பாயிரம் வெள்ளிக்கிழமை அன்று வந்துள்ளார். வெகு ஆண்டுகளுக்கு பின்னர் கணவர் வந்திருந்தாலும் அதை பெரிதும் ராதிகா பொருட்படுத்தவில்லையாம். வந்ததில் இருந்து ராதிகாவுடன் ஏதோ சண்டை போட்டுக் கொண்டே இருந்துள்ளார் கரும்பாயிரம். வெள்ளியன்று இரவு தொடர்ந்த சண்டை மறுநாள் சனிக்கிழமை அதிகாலை வரை நீடித்துள்ளது. இதில் ஒருகட்டத்தில் வீட்டில் இருந்த மண்வெட்டியை எடுத்து ராதிகாவை வெட்ட கரும்பாயிரம் முயன்றுள்ளார்.
தன் தாயை வெட்ட தந்தை முயற்சிப்பதை கண்ட முதல் மகன் ஜீவா தனது நண்பர்கள் அந்தோணி ஆகாஷ், பெர்கின்ஸ் ஆகியோருடன் சேர்ந்து கரும்பாயிரத்தை அரிவாளால் கழுத்தில் வெட்டி சாய்த்துள்ளார். இதில் இதனால் பலத்த காயமடைந்த கரும்பாயிரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ராதிகா கடும் அதிர்ச்சியடைந்தார். தனது தாயை வெட்ட வந்த தந்தையை கொலை செய்த ஜீவா அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கரும்பாயிரம் உடலை மீட்டு தஞ்சை மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா உத்தரவின்பேரில், தனிப்படை உதவி ஆய்வாளர் த ராஜேஷ் குமார் மற்றும் தலைமை காவலர்கள் உமாசங்கர், ராஜேஷ் மற்றும் காவலர்கள் அருள்மொழிவர்மன் நவீன் ஸ்ரீஜித் மற்றும் அழகு சுந்தரம் ஆகியோர் அடங்கிய தனிப்படை ஜீவா உட்பட மூன்று பேரையும் நாஞ்சிக்கோட்டை அருகே சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் 3 பேரையும் தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து உதவி ஆய்வாளர் அபிராமியிம் ஒப்படைத்தனர். காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் புலன் விசாரணை மேற்கொண்டுள்ளார்.