உலகப் புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான பங்குனி உத்திர திருவிழா மார்ச் 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.இதன் முக்கிய நிகழ்வான ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆழித்தேர் திருவிழா வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி நடைபெறவிருக்கிறது.தற்போது தேரின் மேல் கட்டுமான பணிகள் என்பது நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் தேர் திருவிழா நடத்துதல் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் காவல்துறை நகராட்சி தீயணைப்புத்துறை பொதுப்பணித்துறை கட்டிட பராமரிப்பு மின்சார வாரியம் நெடுஞ்சாலைத்துறை வேளாண்மை பொறியியல்துறை பொதுப்பணித்துறை கட்டிடம் தொலைபேசித் துறை மருத்துவ துறை அரசு போக்குவரத்து கழகம்  சுற்றுலாத்துறை கலை பண்பாட்டுத் துறை செய்தி மக்கள் தொடர்பு துறை கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

 

இந்த கலந்தாய்வு கூட்டத்தில் தேரோட்டம் நடைபெறும் போது தேருக்கு முன்னும் பின்னும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தேர் திருவிழாவின் போது திருவாரூர் நகரப் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவும் இரண்டு நாள் பின்னதாகவும் கூடுதலாக ஒரு மணி நேரம் தண்ணீர் வழங்க வேண்டும்.துப்புரவு பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். தேருக்கருகில் தீயணைப்பு வண்டி இருக்க வேண்டும். மின்சாரம் தடை இன்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் கூடுதல் பேருந்து வசதி ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

 

குறிப்பாக மருத்துவ துறை சார்பில் தேர் திருவிழா நாளுக்கு மூன்று நாட்கள் முன்னும் மூன்று நாட்கள் பின்னும் திருவாரூர் மாவட்ட மருத்துவமனையில் பகல் இரவு முழுவதும் கூடுதலாக மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் பணிபுரிய ஏற்பாடு செய்ய வேண்டும். தேரோட்டம் நடைபெறும் போது தேரினை பின் தொடர்ந்து மருத்துவர்கள் செவிலியர்கள் அடங்கிய குழு ஒன்று தேவையான மருந்துகளுடன் ஆம்புலன்சில் வரவேண்டும் போன்ற பல்வேறு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

பின்னர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ செய்தியாளர்களிடம் கூறும் பொழுது, "தேரோட்டத்தை முன்னிட்டு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேரோட்டத்தினை கண்டுகளிக்க பொது மக்களுக்கு சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. நான்கு வீதிகளிலும் 30க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்" என்றார். மேலும், உலகப் புகழ் பெற்ற திருவாரூர் ஆழி தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.