திருவாரூர் மாவட்டம் திருச்சேறை வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (35). இவர் குடவாசல் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் எப்பொழுதும்போல் பணிக்கு வந்து நேற்று இரவு தனது வீட்டிற்கு செல்வதற்காக குடவாசல் பேருந்து நிலையத்திற்கு மருத்துவமனையில் இருந்து நடந்து வந்து கொண்டிருந்தார், அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 19 வயது இளைஞர் விஷ்ணு என்பவர் அவர் கையில் வைத்து இருந்த பேக்கை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார். அதனை கண்டு அச்சம் அடைந்த ராஜேஸ்வரி  சத்தம் போட்டுள்ளார், உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு தப்பி ஓடிய இளைஞரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.



 

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் ஈரோடு மாவட்டம் கொத்துக்காரர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் மகன் விஷ்ணு 19 வயது என்கிற இளைஞர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு குடவாசல் பகுதியில் உள்ள தனது மாமா மணி வீட்டிற்கு வந்து தங்கியிருக்கிறார். இந்த நிலையில் நேற்று கடை வீதிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற விஷ்ணு இந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த இளைஞர் ஈரோடு மாவட்டத்திலும் இதே போன்று கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



 

மேலும் ராஜேஸ்வரியிடம் பறித்துச் சென்ற பேக்கில் 30 ஆயிரம் ரூபாய் பணம் இருப்பது தெரியவந்ததை அடுத்து அந்த பணத்தை ராஜேஸ்வரியிடம் காவல்துறையினர் திரும்ப ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பிரிவின்கீழ் இளைஞர் விஷ்ணு மீது குடவாசல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து குடவாசல் பகுதிகளில் அதிக அளவில் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவதால் காவல்துறையினர் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் காவல் துறையினர் வணிகர்களுக்கு குடவாசல் மெயின் ரோட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் எனவும் காவல்துறையினர் வணிகர்களை வலியுறுத்தி உள்ளனர். குடவாசல் பகுதியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் வழிப்பறி நடந்த சம்பவம் அந்தப் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.