மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசை கண்டித்து திருவாரூரில் முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் நேற்று 1000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு விலைவாசி உயர்வு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், கொலை குற்றங்கள் போன்ற பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்று வருவதாக குற்றஞ்சாட்டி கடந்த 9ஆம் தேதி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் கடந்த எட்டாம் தேதி மாலை நீலகிரி மாவட்டம் குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 14 ராணுவ வீரர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தால் நாடே அதிர்ச்சியில் இருந்தது. இதன் காரணமாக அதிமுகவின் போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.




இந்த நிலையில் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மட்டுமல்லாது முன்னாள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் என தமிழகம் முழுவதும் திமுக அரசுக்கு எதிரான கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பாக முன்னாள் அமைச்சரும், நன்னிலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான காமராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல் டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்க வேண்டும், வெள்ளத்தால் பயிர் பாதிப்பு ஏற்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக ஹெக்டேர் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும், மேலும் மறு சாகுபடிக்காக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 12,000 ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. தூய்மை பணியாளர்களுக்கு உடனடியாக ஊக்கத் தொகைகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 1000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.




இந்த நிலையில் அதிமுகவின் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்த நிலையில் காவல்துறையினரின் தடையை மீறி அதிமுகவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த நிலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டது நோய்தொற்று ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் 600 அதிமுகவினர் மீது திருவாரூர் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.