திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் சம்பா மற்றும் தாளடி நெல் பயிர் சுமார் 3.75 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறுவை அறுவடை சமயத்தில் தொடர் கனமழை பெய்ததன் காரணமாக சுமார் 50 ஆயிரம் ஏக்கர் அளவிற்கு குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முழைத்துவிட்டதாக தமிழக அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. குறுவையில் பாதிப்பை சந்தித்த விவசாயிகள் அடுத்த சாகுபடியான தாளடி மற்றும் சம்பா சாகுபடியை மேற்கொண்டபொழுது மீண்டும் பருவம் தப்பிய தொடர் கனமழை காரணமாக சம்பா, தாளடி பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகின. இதில் குறிப்பாக தாளடி பயிர்கள் 75 சதவீதம் அளவிற்கு மழை நீரில் மூழ்கி அழுகிவிட்டன.
இதன் தொடர்ச்சியாக மீதமுள்ள சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்களை விவசாயிகள் பாதுகாக்கும் வகையில் அரசு யூரியா போன்ற இடு பொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், உரத் தட்டுப்பாடு காரணமாக தனியார் உர வியாபாரிகளிடம் இருந்து அதிக விலை கொடுத்து உரங்களை வாங்கி தற்போது 70 முதல் 80 நாட்கள் வயதுடைய சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்களை பாதுகாத்து வளர்த்து வந்தனர். இந்தநிலையில் கதிர் வந்த பயிர்களை எலிகள் அளித்து வருவதால் விவசாயிகள் மேலும் கவலை அடைந்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி தொடர்ந்து கன மழை பெய்ததன் காரணமாக தாளடி சம்பா பயிர்கள் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் முன்பட்ட விதை விதைப்பு செய்த பயிர்கள் தற்போது கதிர் வந்துள்ள நிலையில், தற்பொழுது எலிகள் நெற்பயிர்களை கடித்து பாழாக்கும் நிலை உள்ளது.
தற்போது இந்த பகுதியில் மயில்கள் அதிகமாக காணப்படுவதால், பாம்புகள் மயிலுக்கு அஞ்சி சென்றுவிட்டன. எலிகளை பிடிக்கும் பாம்புகள் இல்லாததால் எலிகளின் தொல்லை அதிகமாக உள்ளது என விவசாயிகள் கூறுகின்றனர். எலிகளை ஒழிப்பதற்கு விஷ மருந்துகளை பயன்படுத்தாமல் பாரம்பரிய முறையில் புகை கலயத்தின் மூலமாக விவசாயிகள் எலிகளை உயிருடன் பிடித்து வருகின்றனர். வயல் வரப்புகளில் உள்ள எலிபொந்துகளில், துளையிட்டு மண்பானையில் வைக்கோல் மூலம் புகையை உண்டாக்கி துளையில் வாய்வைத்து ஊதி பாரம்பரிய முறையில் எலிகளை பிடிக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, முன்கூட்டியே விதைப்பு விதைத்த பயிரில் தற்பொழுது கதிர் வந்துள்ளது. இந்த நேரத்தில் எலி தொல்லை அதிகமாக உள்ளது. எங்களுக்கு பாதிப்பும் அதிகமாக உள்ளது எனவும், மற்ற உயிரினங்கள் பாதிக்கும் என்பதற்காக எலிகளுக்கு விஷங்கள் வைப்பதில்லை. பழங்கால முறைப்படி புகை வைத்து எலியைப் பிடிக்கின்றோம். தற்பொழுது மயில் அதிகமாக இந்த பகுதிக்கு வந்து விட்டதால், பாம்புகள் வெளியேறி விட்டது. இதனால் எலி தொல்லை அதிகமாக உள்ளது என்றும் விஷம் வைக்காமல் பாரம்பரிய முறையில் எலியை பிடித்து வருகிறோம் என்கின்றனர்