தமிழ்நாடு முழுவதும் வருமான வரித்துறையினர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் முன்னாள் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் வீட்டில் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் திருவாரூர் அருகே ரூபாய் 17 லட்சம் ஹவாலா பணம் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் நியாஸ்கான். இவர் கும்பகோணம் வழியாக திருவாரூர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது குடவாசல் என்னும் இடத்தில் காவல் சோதனைச் சாவடியில் காவலர் மகேந்திரன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த நியாஸ் கானை மறித்து விசாரணை செய்துள்ளார். அப்போது அவரது வாகனத்தை சோதனை செய்தபோது அதில் 17 லட்சம் ரொக்க பணம் இருப்பது தெரியவந்தது. பணம் குறித்து காவலர் மகேந்திரனிடம் விசாரணை செய்த போது நியாஸ் கான் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த மகேந்திரன் குடவாசல் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். விரைந்து வந்த காவல்துறையினர் மகேந்திரனையும், ரூபாய் 17 லட்சம் ரொக்கப் பணத்தையும், அவரது இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.




தொடர்ந்து குடவாசல் காவல்துறையினர் நியாஸ் கானிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் 17 லட்ச ரூபாய் ரொக்க பணமும் ஹவாலா பணம் என தெரியவந்தது. அதிராம்பட்டினத்தை சேர்ந்த இர்பான் தன்னிடம் இந்த பணத்தை கொடுத்து ஒரு கோடு வேர்டு மற்றும் அலைபேசி எண்ணை கொடுத்ததாகவும் அந்த எண்ணை தொடர்பு கொண்டால் ஒரு இடத்திற்கு வந்து பணத்தை வாங்கிச் செல்வார்கள் என்றும் இதில் தனக்கான கமிஷன் தொகையை முன்னரே வழங்கி விடுவார்கள் என்றும் காவல்துறையினர் விசாரணையில் நியாஸ் கான் வாக்குமூலம் அளித்துள்ளார். ஹவாலா பணம் என்பதால் குடவாசல் காவல்துறையினர் உடனடியாக வருமான வரித் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதனடிப்படையில் திருச்சியிலிருந்து துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான வருமான வரித்துறையினர் குடவாசல் விரைந்து வந்து நியாஸ் கானையும், ரூபாய் 17 லட்சம் ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்து திருச்சிக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




மேலும் ஹவாலா பணத்தை நியாஸ் கானிடம் கொடுத்த இர்பான் யார் என்பது குறித்தும், பணத்தை யாருக்கு கொண்டு சென்றார் என்பது குறித்தும், மேலும் ஹவாலா பண பரிமாற்றத்தில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்தும் காவல் துறையினரும் வருமானவரித் துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருவாரூர் அருகே ஹவாலா பணம் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.