காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி, உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த ஆண்டு 4.30 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 70 சதவிகிதம் அறுவடை பணிகள் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள குறுவை நெல் பயிர்கள் தற்போது அறுவடைப் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களாக டெல்டா மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெல் பயிர்கள் மழை நீரில் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் ஈரப்பதம் இருந்தால் மட்டுமே விவசாயிகளிடம் இருந்து நெல்மணிகள் கொள்முதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மணிகளை கொள்முதல் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெல்லின் ஈரப்பதம் அதிக அளவில் இருந்து வருகிறது. ஆகவே நெல்லின் ஈரப்பதம் சதவிகிதத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் தற்போது குறுவை அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் செய்ய நெல்லில் ஈரப்பதம் 17 சதவீதத்திற்கும் மேல் இருக்க கூடாது என கொள்முதல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் தற்போது பெய்து வரும் திடீர் மழையால் உளர்த்துவதற்காக வைக்கப்பட்ட நெல்மணிகள் நனைந்து விவசாயிகளுக்கு வேலை பளுவை, இரட்டிப்பு செலவையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மழையில் நனைந்து நெல் வீணாவதை தடுக்கவும், நெல் உளர்த்துவதில் விவசாயிகளுக்கு ஏற்படும் சிரமத்தை போக்கும் வகையில் தமிழகத்திலேயே முதல் முறையாக மன்னார்குடி அருகே செருமங்களம் கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பரிசோதனை அடிப்படையில் தானியங்கி நவீன நெல் உலத்தும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரத்தின் மூலம் ஒரே நேரத்தில் 2 டன் அளவிலான நெல்லை உலர்த்த முடியும். மழை காலங்களில் நெல்லின் ஈரப்பதத்தை குறைத்து, அதிக அளவு நெல்லை கொள்முதல் செய்ய இத்தகைய தானியங்கி நெல் உலர்த்தும் இயந்திரம் பேருதவியாக இருக்கும். தமிழ்நாடு முதல்வர் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த இயந்திரத்தை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்த பொழுது விவசாயிகள் அவரிடம் இந்த கோரிக்கையை வைத்திருந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் முதன்முறையாக நெல் உலர்த்தும் இயந்திரம் மன்னார்குடி அருகே செருமங்கலத்தில் கொண்டுவரப்பட்டதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
டிராக்டருடன் இணைந்தபடி பஞ்சாப்பில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள இந்த இயந்திரத்தின் மதிப்பு 25 லட்சம் ஆகும். ஒரு மணி நேரத்தில் 1.5 டன் நெல்லை உலர்த்த முடியும். இதன் மூலம் 22% ஈரப்பதம் உள்ள நெல்லை 11% ஈரப்பதத்திற்கு மாற்ற முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.