தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் வரும் ஜன.7-ல் தியாகராஜர் ஆராதனை விழா நடக்கிறது என்று தியாகபிரம்ம மஹோத்சவ சபா பொதுக்குழு கூட்டத்தில் சபா தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார்.

Continues below advertisement

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தியாகராஜர் திருமணமண்டபத்தில் தியாகபிரம்ம மஹோத்சவ சபா பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சபா செயலாளர்கள் ஏ.கே.பழனிவேல், ராஜராவ் ஆகியோர் வரவேற்று பேசினா். சபாவின் அறங்காவலர்கள் சந்திரசேகர மூப்பனார், சுரேஷ்மூப்பனார், டெக்கான் மூர்த்தி, பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சபா தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்தார். கூட்டத்தில் 2024-2025 நிதிநிலை அறிக்கையை சபா பொருளாளர் கணேஷ் சமர்ப்பித்தார் அதை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.  தொடர்ந்து சபா தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது: தியாகராஜரின் 179-வது ஆராதனை விழா வரும் 2026 ஜனவரி 7-ம் தேதி சிறப்பாக நடத்திட அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், இதையொட்டி வரும் நவ.30-ம் தேதி காலை 8.30 மணி முதல் 10 மணிக்குள் ஆராதனை விழா பந்தகால் நடும் முகூர்த்தம் நடைபெறுகிறது. இதில் நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டு ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் உதவிச்செயலாளர்கள் கோவிந்தராஜன், ராஜகோபாலன், ரவிச்சந்திரன் மற்றும் சபா நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் சபா பொருளாளர் கணேஷ் நன்றி கூறினார்.

தியாகராஜ ஆராதனை என்பது ஒவ்வொரு ஆண்டும் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரும் தியாக பிரம்மம் என்று போற்றப்படுபவரும் தென்னிந்திய இசைக்கு அளப்பரிய சேவைகள் ஆற்றியவருமான தியாகராஜரைப் போற்றி நடத்தப்படும் ஒரு இசைத் திருவிழாவாகும். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாற்றில், தியாகராஜர் ஜீவ சமாதி அடைந்த இடத்தில் கொண்டாடப்படுகிறது. அவர் இறந்த புஷ்ய பகுல பஞ்சமி நாளில் இத்திருவிழா நடைபெறும். அங்கு இசைக்கலைஞர்கள் தியாகராஜர் இயற்றிய பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடுவார்கள்.

Continues below advertisement

இந்த இசைத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தியாகராஜரின் நினைவு நாளில் நடத்தப்படுகிறது. இது இந்துக் காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் பஞ்சமி அன்று நிகழ்த்தப்படுகிறது. இத்திருவிழாவினை ஸ்ரீதியாகபிரம்ம மகோத்சவ சபை நடத்துகிறது.