தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுபள்ளியை சேர்ந்தவர் விஜயகுமார் (24), இவர் நேற்று தனது உறவுகாரப்பெண் ஒருவருடன் டூ விலரில், தஞ்சாவூருக்கு வந்துக்கொண்டிருந்தார். அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத பனவெளியை அருகே வந்த போது, தஞ்சாவூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், விஜயகுமாரை வழிமறித்து, அவரிடம் இருந்த விலை உயர்ந்த மொபைல் மற்றும் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால் விஜயகுமார் கொடுக்க மறுத்த நிலையில், ஆத்திரமடைந்த கொள்ளையர்கள், திடிரென 2 அடி நீளமுள்ள வாளை எடுத்து, விஜயகுமாரின் மூக்கை துண்டாக்கி, கையில் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி காயப்படுத்தினர்.
இதையடுத்து, இருவரும் ஒரு மொபைல் போன், விஜயகுமார் உறவு பெண்ணின் காதில் இருந்த ஒரு சவரன் கம்மலையும் தப்பியோடினார். இதனையறிந்த விஜயகுமாரும், உறவுக்கார பெண்ணும் கூச்சலிட்டனர். அப்போது அவ்வழியாகவும், வயல்களில் வேலை பார்த்து வந்த கிராம மக்கள், போலீஸ் அவரச எண் 100க்கு போன் செய்து, வண்டி எண்ணை தெரிவித்தனர். கட்டுபாட்டு அறையில் இருந்து தகவல் நடுக்காவிரி போலீஸ் சரகத்திற்குட்பட்ட வாகன சோதனை சாவடியில் உள்ள போலீசார் கலியராஜ், முரளி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக இருவரும் இருசக்கர வாகனத்தை எடுத்து விரட்டி சென்றனர். பின்னர் அவர்கள், ஹைவே பட்ரோல் போலீஸ் நெடுஞ்செழியனுக்கு தகவல் அளித்து அவர்களும் விரட்டி சென்றனர். பின்னால் போலீசார் வாகனத்தில் விரட்டி வருவதையறிந்த இரண்டு கொள்ளையர்களும் பைக்கை வேகமாக ஒட்டினர். ஆனால் போலீசார், தன் உயிரை மதிக்காது, சுமார் 8 கிலோ மீட்டர் துாரம் விரட்டி சென்று, கொள்ளையர்களின் இருசக்கர வாகனம் மீது மோதினர். இதில் நிலைதடுமாறிய கொள்ளையர்கள், கீழே விழுந்த நிலையில், போலீசாரிடமிருந்து தப்பிப்பதற்காக, மீண்டும் வயல் பகுதியில் ஓடினர். ஆனாலும், போலீசார், வயல் வரப்புகளில் விரட்டி சென்று போலீசார் அவர்களை பிடித்து நடுக்காவேரி போலீசில் ஒப்படைத்தனர்.
பிடிப்பட்ட கொள்ளையர்களிடம் நடத்திய விசாரணையில் கும்பகோணம் மொட்டைகோபுரம் பகுதியை சேர்ந்த தினேஷ் (20), தாரசுாரத்தை சேர்ந்த பிரகாஷ் (21) என்பதும், அவர்கள் மீது கும்பகோணம் பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த மொபைல், தோடு, வாள் உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்தனர். மூக்கில் வெட்ட காயமடைந்த விஜயகுமார், தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார். திரைப்படத்தை விஞ்சும் அளவிற்கு, போலீசார் துரிதமாகவும், உயிரை மதிக்காமல், பொருட்களை தவற விட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும், எந்த பிரதிபலனும் பாராமல், சுமார் 8 கிலோ மீட்டர் துாரம் விரட்டி சென்று கொள்ளையர்களை பிடித்ததால், அப்பகுதி மக்கள், போலீசாரை பாராட்டினர்.