கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்கவேலி தோப்புத்தெருவைச் சேர்ந்தவர் பூமிநாதன் மகன்கள் கூலித் தொழிலாளிகளான அருண்குமார் (28), அரவிந்த் (25), ரவி மகன் சந்தோஷ் (22), இவர்கள் மூவரும், 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ஆம் தேதி அதே பகுதி அய்யாகோயில் என்ற இடத்தில் நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது சோழபுரம் பெரியார் நகரைச் சேர்ந்த சோ.காரல் மார்க்ஸ் (30) என்பவரும், அவரது நண்பர்கள் ராஜேஷ், நரேஷ், பங்கு சதீஷ் ஆகிய நால்வரும் சேர்ந்து அரிவாளால் அருண்குமார், அரவிந்த், சந்தோஷ் ஆகியோரை அரிவாளால் வெட்டினர்.இதில் அருண்குமார் அதே இடத்தில் இறந்தார். படுகாயமடைந்த அரவிந்த், சந்தோஷ் ஆகியோர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட அரவிந்த் உயிரிழந்தார்.  அரிவாளால்  வெட்டிய நான்கு பேரும் தப்பி ஓடிவிட்டனர். அருண் குமாருக்கும், காரல் மார்க்சுக்கும் முன்விரோதம் காரணமாக இந்த இரட்டை கொலை நடைபெற்றுள்ளதாக திருப்பனந்தாள் போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து திருப்பனந்தாள் போலீஸார் கொலை வழக்குப் பதிந்து, கொலையில் தொடர்புடைய கார்ல் மார்க்ஸ், ராஜேஷ், நரேஷ், பிறையரசன், சதீஷ், விக்னேஷ் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.



பின்னர், இந்த இரட்டை கொலை வழக்கு திருவிடைமருதூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு திருவிடைமருதூர் கோர்ட்டிற்கு  வந்தது. அப்போது, கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரையும் ஜாமீன் எடுப்பதற்காக குமரங்குடியை சேர்ந்த நாகப்பன் மகன் காசிராமன் (53) மற்றும் அதே பகுதியை சேர்ந்த வீரமுத்து மகன் பாலு (53) ஆகிய இருவரும் கோர்ட்டிற்கு வந்தனர். அப்போது, கோர்ட்டில், தான் குற்றவாளிகளுக்கு ரத்த சொந்தம் என்று கூறி, ஆவணங்களை சமர்ப்பித்தனர்.




ஆவணங்களையும், இருவரையும் விசாரணை செய்த கோர்ட், இருவரும் போலியாக ஆவணங்களை வழங்கியதும், ஆள்மாற்றாட்டம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து திருவிடைமருதூர் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் கோர்ட் நீதிபதி நிலவரசன்,  காசிராமன் மற்றும் பாலு இருவர் மீதும் வழக்கு பதிந்து, சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து திருவிடைமருதுார் போலீசார், காசிராமன், பாலு மீது, ஆள்மாறாட்டத்தால் ஏமாற்றுவது, நீதிமன்றத்தின் பதிவுக் கட்டு அல்லது பொதுப் பதிவேடு முதலியவற்றைப் போலியாக தயாரித்தல், ஏமாற்றும் பொருட்டுப் போலியாகத் தயார் செய்தல், ஏமாற்றுதலும் பொருளை கொடுப்பதற்கு நேர்மையற்ற முறையில் இணங்கச் செய்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர். கொலை வழக்கில் தொடர்புடையவர்கள், போலியாக ஆவணம் தயாரித்து, ஆள்மாற்றாட்டம் செய்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.