தியாகராஜர் கோயில் மேற்கு கோபுர வாசல் நடைபாதை மண்டபம் விரிசல் ஏற்பட்டு 4 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. மழை காலத்தில் தண்ணீர் ஒழுகுவதால் உடன் சீரமைத்திட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலக பிரசித்தி பெற்ற தியாகராஜர் கோயில் மேற்கு கோபுர வாசல் நடைபாதை மண்டபம் விரிசல் ஏற்பட்டு 4 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. மழை காலத்தில் தண்ணீர் ஒழுகுவதால் உடன் சீரமைத்திட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உலக புகழ் பெற்ற தியாகராஜர் கோயில் சர்வதோஷ பரிகார தலமாகவும், சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்கிறது. இந்த கோயிலின் ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகக்பெரியது. தோன்றிய வரலாற்றை கணக்கிட முடியாத அளவு தொன்மை வாய்ந்த கோயிலாக விளங்குகிறது. ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த தஞ்சை பெரிய கோயில் திருவாரூர் தியாகராஜ கோயிலை அடிப்படையாக கொண்டு கட்டப்பட்டது என்பதும் குறிப்பிடதக்கது. இந்த சிறப்புக்குரிய கோயிலின் மேற்கு கோபுர வாசலில் குளமே ஆலயமாக கமலாலய குளம் அமைந்துள்ளது. இந்த மேற்கு கோபுர வாசலில் நுழைவு பகுதியில் கோயில் நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் முன்பு பக்தர்கள் கோயிலுக்கு செல்லும் நடைபாதையில் மண்டபம் அமைந்துள்ளது.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த நடைபாதை மண்டப பாதையை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 2018 ஆண்டு இந்த மண்டபத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டது. கோயில் நடைபாதை மண்டபத்தில் ஏற்பட்டு விரிசல் குறித்து அறநிலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பழமை வாய்ந்த கட்டிடம் என்பதால் கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கபட்டது. அவர்களின் பரிந்துறையின் படி மண்டபத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் 4 ஆண்டுகள் ஆன நிலையில் எந்தவித பணிகளும் நடைபெறாமல் உள்ளது. மண்டபம் விரிசல் ஏற்பட்டதையடுத்து இந்த வழிபாதை அடைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் நேர் வழியாக கோவிலுக்கு செல்லாமல் அருகில் உள்ள வழிபாதையை பயன்படுத்தி வருகின்றனர். விரிசல் ஏற்பட்ட மண்டபம் மழை காலங்களில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு வருகிறது. அந்த காலத்தில் இயற்கை மூலப்பொருட்களை கொண்டு கருங்கல்லால் கட்டப்பட்ட மண்டபம் நாளுக்கு நாள் பலவீனம் அடைந்து வரும் நிலவி வருகிறது.
தற்போது மழை காலம் என்பதால் மண்டபம் மேலும் பலவீனப்பட்டு ஏதேனும் விபத்து ஏற்படும் முன்பு கட்டிடம் வலுவாக உள்ளதா என்பதை ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் திருவாரூர் தியாகராஜர் கோவிலின் அனைத்து கோபுரங்களிலும் மர கிளைகள் காணப்பட்டு வருகின்றன இதனால் கோபுரங்கள் சிதலமடையக்கூடிய நிலை உருவாகியுள்ளது அது மட்டுமின்றி கோவிலை சுற்றி கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவரை பயன்படுத்தி பல நபர்கள் குடியிருப்புகளை கட்டி வருகின்றனர் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் யாரும் ஆக்கிரமிக்க கூடாது என கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் பல நபர்கள் கோவில் இடங்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வருகின்றனர் இதனால் கோவில் சுற்றுச்சுவர் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது ஏற்கனவே கோவில் மண்டபம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சுற்றுச்சுவரும் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது ஆகவே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில் உரிய கவனம் செலுத்தி கோவிலின் சுற்றுச்சூழலை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.