நடப்பாண்டு சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டு விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய நாகை மாவட்டத்தில் 166 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு பெரும்பாலான விவசாயிகளிடம் இருந்து அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூரை அடுத்துள்ள பட்டமங்கலத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ளது. இதுவரை கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 8000 நெல் மூட்டைகள் வளாகத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், நேற்றைய 580 மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன.

 



 

நேற்றிரவு வழக்கம்போல் கொள்முதல் பணியை முடித்துவிட்டு, பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று  காலை கொள்முதல் நிலையத்திற்கு வந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள்  நிலையத்தில் முகப்பு கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்‌. அதனை தொடர்ந்து அங்கு  வந்த  பட்டியல் எழுத்தர் சக்திவேல்  உள்ளே சென்று பார்த்த பொழுது கொள்முதல் செய்து வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் சில திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 



 

அதனை தொடர்ந்து நேற்றைய தினம் கொள்முதல்  செய்து  வைக்கப்பட்டிருந்த 580 முட்டைகளில் 47 நெல் மூட்டைகள் திருடு போயிருப்பதாக உறுதியானது. அதனைத் தொடர்ந்து 38,728  மொத்த மதிப்புடைய 40 கிலோ எடை கொண்ட 47 நெல் மூட்டைகளை மர்ம நபர்கள் திருடியதாக பட்டியல் எழுத்தர் சக்திவேல் கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இது தொடர்பாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் நேற்றைய தினம் நிலைய வாட்ச் மேன் விடுமுறை காரணமாக பணிக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.