தஞ்சாவூர்: கொஞ்சி கொஞ்சி அலைகள் ஆட... இருபுறமும் காற்று வீச என்று வீக் எண்ட் நேரத்தில் அமைதியாக குடும்பத்தோடு உற்சாகமாக தஞ்சாவூர் பகுதி மக்கள் கடற்கரையில் குதூகலப்பட்டு வருகின்றனர்.


தஞ்சாவூருல ஏதுப்பா பீச்... இருக்குங்க!!!


என்ன காதுல பூ வைக்கிறீங்களா? தஞ்சாவூருல ஏதுப்பா பீச் அப்படின்னு நச்சுன்னு ஒரு கேள்வியை தூக்கி போடாதீங்க. சென்னைக்கு எப்படி மெரினா பீச் இருக்கோ... அதுபோல காவிரி ஆறு கொஞ்சி விளையாடும் தஞ்சாவூருலயும் இருக்கு ஒரு பீச். அதுதான் புதுப்பட்டினம் பீச். பட்ஜெட் போட்டு வாழும் நடுத்தர மக்களின் வீக் எண்ட் கொண்டாட்டத்திற்கும், பிக்னிக் ஸ்பாட்டுக்கும் மிக சிறப்பான இடம் தான்... இந்த புதுப்பட்டினம் பீச். 


வாங்க புதுப்பட்டினத்திற்கு... அங்கதான் இருக்கு..


அதெல்லாம் சரிதான். இது எங்க இருக்கு அப்படின்னு கேட்கறீங்களா. வாங்க சொல்றோம்... நீண்டு விரிந்து பரந்து நீல வர்ணமாக பரவசப்படுத்தும் வங்க கடலின் கடற்கரை தஞ்சாவூர் மாவட்டத்தில் 45 கிலோ மீட்டர் நீளத்தில் அமைந்துள்ளது. 27 மீனவ கிராமங்கள் உள்ளன. அதில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய இடங்களில் மீன்பிடித் தளங்கள் இருக்கு. அப்போ தஞ்சாவூர் பீச்... அட இருங்க. சொல்வோம்ல... 


மல்லிப்பட்டினம் அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் புதுப்பட்டினம் கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள கடற்கரைப் பகுதிதான் இப்போ செம பேமஸ். தஞ்சாவூர் மக்களின் சூப்பர் ஸ்டார் என்றால் இப்போ அது புதுப்பட்டினம்தான். எடு பைக்கை... விடு புதுப்பட்டினம் கடற்கரைக்கு என்று மனம் மகிழ்ந்து, அலுவலக கவலைகளை களைந்து குடும்பத்துடன் உற்சாகமாக நாளை போக்க புதுப்பட்டினம் பீச்சுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வர ஆரம்பிச்சுட்டாங்க. அந்தளவிற்கு மக்களை கவர்ந்து இழுத்து வருகிறது இந்த புதுப்பட்டினம் பீச்.




டென்ஷன் காணாமல் போகும்... மனசு லேசாகும்


அடடா... என்ன ஒரு அமைதி. மனசு லேசாகுது. டென்ஷன் காணாமல் போகுது. சுற்றி உள்ள தென்னந்தோப்பிற்குள் புகுந்து வந்து கவிதையாய் தாலாட்டும் காற்றும்,  2 கி.மீ தொலைவுக்கு வெள்ளை வெளேர் என்ற மணற்பரப்பும் இது நம்ம ஊரு “கோவா”ங்கோ என்று மனசை கொள்ளை கொள்கிறது. வெள்ளை மணலில் துள்ளி விளையாடும் குழந்தைகளை கண்டால் நாமும் குழந்தைகளாக மாறிவிடுவோம்.


ஹாய் சொல்ல ஓடோடி வரும் அலைகள்


ஆர்ப்பாட்டம் இல்லாத அலைகள் கரையை தொட்டு ஹாய் சொல்ல ஓடோடி வருகின்றன. கொஞ்சி கொஞ்சி ஆடும் அலைகளில் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அலையே என்னை தொடு என்று ஓடியாடி மகிழ்கின்றனர். மாலை வேளையில் மஞ்சள் வெயிலின் சூடு கொஞ்சம் கூட தெரியாமல் தென்னந்தோப்பில் புகுந்து வரும் காற்று நம்மை தழுவும் போது உடல் மட்டுமல்ல மனசும் சிலிர்க்கிறது.


சர்...சர்ன்னு வந்து நிற்கும் கார்கள், பைக்குகள்


நம்ம ஊரு கொலம்பஸ்கள் லீவு விட்டாச்சுன்னா புது, புது இடங்களா தேடுவாங்க விடுமுறையை கொண்டாட. இவங்களுக்கெல்லாம் ஏற்ற இடம்னு பார்த்தா புதுப்பட்டினம் கடற்கரை பெஸ்ட் சாய்ஸ் என்றால் மிகையில்லை. விடுமுறை நாட்களில் அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம், தஞ்சாவூரின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கார், வேன்களில் ‘தஞ்சாவூர் மாவட்ட பீச்'  புதுப்பட்டினம் கடற்கரைக்கு குடும்பத்தினருடன் வந்து மனம் மகிழ்ந்து செல்கின்றனர்.


அருமையான சுற்றுலா தலமாக மாறியுள்ள புதுப்பட்டினம்


சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என பலரும் கடலில் இறங்கி குளித்தும் மகிழ்கின்றனர். இப்போ இந்த இடம் அருமையான சுற்றுலா தலமாக மாறி வரும் நிலையில் ஆங்காங்கே கடைகளும் வந்திடுச்சு. என்ன மக்கள் அவசரத்திற்கு ஒதுங்க கழிவறை வசதிகள் செய்து தந்தா அருமையான பிக்னிக் ஸ்பாட்டாக புதுப்பட்டினம் கடற்கரை மாறிடும். அதிகாரிகள் கவனம் வைச்சு செஞ்சாங்கன்னா இன்னும் நல்லா இருக்கும். குறைந்த செலவுல மனசு நிறைஞ்சு போறாங்க மக்கள்.