தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே இளம்பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக பாப்பாநாடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடு காவல் சரகத்தை சேர்ந்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 23 வயது பி.எஸ்.சி., பட்டதாரி இளம்பெண். இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது தந்தை சுமைதூக்கும் தொழிலாளி, தாய் கூலி தொழிலாளி.


கடந்த சில நாட்களுக்கு முன்பு, விடுமுறைக்காக இந்த இளம்பெண் ஊருக்கு வந்தார். கடந்த 12ம் தேதி இளம்பெண் மட்டுமே வீட்டில் தனியாக இருந்த போது, தெற்குக்கோட்டையை சேர்ந்த கவிதாசன்(25)  என்பவர் அந்த இளம்பெண் வீட்டுக்கு வந்து, அவரிடம் பேச வேண்டும் என கூறி அழைத்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 


காதலன் அழைப்பதால் தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத கொட்டகை பகுதிக்கு அந்த இளம் பெண் சென்றுள்ளார். அங்கு கவிதாசனின் நண்பர்களான பாப்பாநாடு பகுதியை சேர்ந்த திவாகர் (26), பிரவீன் (20) மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் இருந்துள்ளனர். இதனால் அந்த இளம் பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார். 


இதனால் அந்த இளம்பெண் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் கவிதாசன் உட்பட  நான்கு பேரும் சேர்ந்து அந்த பெண்ணை மடக்கி பிடித்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இதை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து வெளியில் யாரிடமாவது சொன்னால் தொலைத்து விடுவோம் என்று மிரட்டலும் விடுத்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீஸில் புகார் செய்ய கவிதாசன் உட்பட 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 24 மணிநேரத்தில் தஞ்சை எஸ்.பி., ஆஷிஷ்ராவத் அதிரடி உத்தரவில் போலீசார் விரைந்து செயல்பட்டு 4 பேரையும் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் பாப்பாநாடு காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக கடந்த ஆக.12ம் தேதி சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா இப்பெண்ணிடம் புகார் மனுவை பெறாமல், ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பி அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது.


இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், காவல் நிலையத்துக்கு வந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக சட்ட உதவி வழங்காமல் அவரை அலைக்கழித்ததாகவும், உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் பணியில் அலட்சியமாக செயல்பட்டதாகவும் கூறி சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தஞ்சாவூர் ஆயுதப் படைக்கு கடந்த சனிக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டார்.


இந்நிலையில் தஞ்சாவூர் எஸ்.பி., ஆஷிஷ் ராவத் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு சப்-இன்ஸ்பெக்டர் சூர்யாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.