தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என்று கூறியதால் இளம் ஆசிரியையைக் கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 


தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை பகுதியை சேர்ந்தவர் முத்து. இவரது மகள் ரமணி (26). இவர் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில்  ஆசிரியராக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார். 


இந்நிலையில் இதே சின்னமனை பகுதியை சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவர் தனது  மகன் மதன் (30)-க்கு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.  இதைத் தொடர்ந்து ரமணியை தங்களின் மகன் மதனுக்கு பெண் கேட்டு சென்றுள்ளனர். ஆனால் ரமணிக்கு, மதனைத் திருமணம் செய்வதில் விருப்பமில்லை என கூறியதாக கூறப்படுகிறது.


இதனால் ஆத்திரமடைந்த மதன் இன்று காலை ரமணி பணியுரியும் பள்ளிக்குள் அத்துமீறி சென்றுள்ளார். அப்போது பள்ளி வளாகத்தில் இருந்த  திருமணம் செய்ய விரும்பாத  ரமணியை கழுத்து பகுதியில் மதன் கத்தியால் குத்தி உள்ளார்.  இதில் ரமணி மயங்கி விழுந்தார்.  பள்ளிக்குள் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மாணவர்கள் பெரும் கூச்சல் போட்டு அலறியுள்ளனர்.


மாணவர்கள் மற்றும் ரமணியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த சக ஆசிரியர்கள் ரமணியை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரமணி இறந்தார். தகவலறிந்த சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மதனை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


பின்னணி என்ன?


இந்நிலையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் காதல் பிரச்னையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மதனும், ரமணியும் காதலித்து வந்ததாகவும், இதற்கு ரமணியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து பெண் கொடுக்க மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் இளம் பெண்ணின் உயிர் பறிபோய் உள்ளது பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.