தமிழ்நாட்டில் பள்ளிக்கு செல்லாமல் மற்றும் பள்ளிக்கு சென்று பாதியில் பள்ளிப் படிப்பை நிறுத்திய மாணவர்கள் பற்றிய விபரங்கள் குறித்து ஆசிரியர்கள் கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென, தமிழ்நாடு பள்ளிக்கல்விதுறை அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் 6 முதல் 19 வயது வரை உள்ள பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் இடைநின்ற குழந்தைகளை கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றிய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் உள்ள பயிற்சி அரங்கில் வட்டார வள மையத்தின் சார்பில் பள்ளிசெல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள் கணக்கெடுப்பு பணி குறித்து தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கொரடாச்சேரி வட்டார கல்வி அலுவலர் சம்பத் தலைமை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் சி.பிரபு முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில் கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் 6 முதல் 19 வயதுவரை உள்ள பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் இடைநின்ற குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்படவேண்டும். இந்த கணக்கெடுப்பு பணியானது 10.08.2021 முதல் 31.08.2021 வரை நடைபெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இப்பணியில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் , ஆசிரியர் பயிற்றுகள், ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் குழுவாக இணைந்து, குழந்தைகளின் குடியிருப்புப் பகுதிக்குச்சென்று கணக்கெடுப்பு பணியை நடத்த வேண்டும். பள்ளிசெல்லா குழந்தைகள் அதிகம் இருக்கும் இடங்களாக கருதப்படும் செங்கல் சூளை, அரிசி ஆலை, கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்கள், கடைகள், தொழில் நிறுவனங்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் இப்பணி நடைபெறும்.
மேலும் ஒன்றியத்தில் அதிக மாணவர்களை சேர்த்த பவித்திரமாணிக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, திருவிடைவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, முசிரியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மணக்கால் அய்யம்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் ஆசிரியர் பயிற்றுநர்கள் அ.காத்தமுத்து, அ.கார்த்திகேயன், மா.செ.கலைச்செல்வன், வ.துர்க்கா, கு.கங்காதேவி, செ.சண்முகப்பிரியா ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களை கூலி வேலைக்கு ஈடுபடுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அனைத்து கிராமப்புறங்களிலும் நேரடியாக ஆசிரியர்கள் சென்று மாணவர்களின் கல்வி நிலை குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.