தமிழ்நாட்டில் கொரானா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவியதை அடுத்து, அதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒன்றாக தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனோ வைரஸ் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மாதம் வரை கொரோனா வைரஸ் தொற்று 500 க்கும் மேற்பட்ட எண்ணிக்கைகளில் நாள்தோறும் பதிவாகிவந்தது. படிப்படியாக குறையத் தொடங்கி நேற்று தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 21 ஆயிரத்து 199 பேர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, 20 ஆயிரத்து 679 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் நேற்று ஒரேநாளில் மட்டும் 28 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 32 பேர் குணமாகி வீடு சென்றுள்ளனர். இந்த சூழலில் நேற்று வரை கொரோனா வைரஸ் தொற்றால் பலியாகியுள்ளனர் எண்ணிக்கை மாவட்டத்தில் 271 அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றிக்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோவில், சீர்காழி, புத்தூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா வகைப்படுத்தும் மையம், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை என மாவட்டம் முழுவதும் தற்போது 249 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வு என மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி போடும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான முழு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு அனைத்து பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும், நடமாடும் தடுப்பூசி வாகனங்கள் மூலமாக பல்வேறு இடங்களுக்குச் சென்றும் பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 182,261 பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 32,466 பேருக்கும் என மொத்தம் 214,727 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதில், கொடியம்பாளையம், தொடுவாய், புதுப்பட்டினம், நல்லநாயகன்புரம், வைக்கால், திருச்சம்பள்ளி, ஆதமங்கலம், கன்னியாகுடி உள்ளிட்ட 8 கிராமங்களிலும், மயிலாடுதுறை, சீர்காழி நகராட்சிகளில் தலா 1 வார்டிலும் வசிக்கும் பொதுமக்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
இதனை பாராட்டும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலாடுதுறை ராஜகுமார், பூம்புகார் நிவேதாமுருகன், சீர்காழி பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு, 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்ட கிராமங்களில் ஊராட்சி மன்ற தலைவர்கள், வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் மருத்துவப்பணியாளர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.