தஞ்சை புதிய பஸ் நிலையம் பகுதியில் மொத்தம் 122 கடைகள் உள்ளன. இதில் 40 கடைகளை சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் மீதமுள்ள 82 கடைகளுக்கு நேற்று ஏலம் நடைபெற்றது.  முதலில் பி பிளாக் பகுதியில் உள்ள 1-ம் கடைக்கு ஏலமிடப்பட்ட போது அரசு சார்பில் வாடகையாக 50 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு ஏலம் எடுக்க வந்த வியாபாரிகள் அவ்வளவு தொகை கட்டுப்படியாகாது. 70 ஆயிரமாக உயர்த்தி அறிவியுங்கள் என கிண்டல் செய்யும் வகையில் கூச்சலிட்டனர். அதன் பிறகு அரசு சார்பில் 20 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும் என கூறினர். அதன் பின்னர் 30 ஆயிரமாக குறைக்கப்பட்டு ஏலமிடப்பட்டது.



இதே போன்று மற்ற கடைகளுக்கும் அரசு சார்பில் வாடகை கட்டணத்தை  உயர்த்தி அறிவித்தனர். இதற்கு வியாபாரிகள் கட்டணத்தை குறைக்க வேண்டும் என  கோஷமிட்டதால், வியாபாரிகள் கேட்க விரும்பும் தொகையில் இருந்து ஏலத்தை கேட்கலாம் என அறிவிக்கப்பட்டு ஏலம் நடைபெற்றது. அதன்படி அதிக பட்சமாக ஒரு கடை 96 ஆயிரத்துக்கும், குறைந்தபட்சமாக 11 ஆயிரத்துக்கும் ஏலம் போனது. 96 ஆயிரத்துக்கு ஏலம் எடுக்கப்பட்ட கடைக்கு  முன்னதாக வாடகையாக 25 ஆயிரமும், 11 ஆயிரத்திற்கு ஏலம் எடுக்கப்பட்ட கடை முன்பு 3 ஆயிரமும் வாடகை செலுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 


இன்று 17 கடைகள் மட்டும் ஏலம் போனது. ஏலம் கேட்காத மற்றும் குறைந்த வாடகைக்கு கேட்கப்பட்ட மீதமுள்ள 65 கடைகளுக்கு  ஏலம் தள்ளி வைக்கப்பட்டது. அந்த கடைகளுக்கான ஏலம் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.  ஏலம் நடைபெற்ற கடைகள் மூலம் டெபாசிட் வாடகை மாநகராட்சிக்கு ஒரு கோடியே 30 லட்சம் வருமானம் கிடைத்தது. தற்போது ஏலமிடப்பட்ட 17 கடைகள் மூலம் மாநகராட்சிக்கு முன்பு ஆண்டுக்கு 13 லட்சம் வருமானம் கிடைத்தது. தற்போது இது 59 லட்சமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட கடைகள் ஏலமிடப்பட்ட போது பரபரப்பாக காணப்பட்டது. ஏலம் எடுக்கவும் கடும் போட்டியும், ஏலத்தை நிறுத்த வேண்டும், ஆணையரை மாற்ற வேண்டும் என திமுகவினரும், வணிகர்களும் சாலை மறியல், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் போட்டிகள் அதிகமானதால், வாடகை தொகை அதிகரித்துக்கொண்டே போனது. வியாபாரிகள் ஆனால் நேற்று தஞ்சை புதிய பஸ் நிலைய கடைகளுக்கு ஏலம் எடுப்பதற்காக வியாபாரிகளும் குறைந்த அளவே வந்திருந்தனர். இதனால் இருக்கைகள் காலியாக காணப்பட்டது.  


இந்த புதிய பஸ் நிலையத்திலுள்ள கடைகளின் ஏலம், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் முன்னிலையில் செயற்பொறியாளர் ஜெகதீசன்,  மேலாளர் கிளமெண்ட், உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கடைகளை ஏலமிட்டனர். ஏலம் நடைபெற்றதையொட்டி மாநகராட்சி வளாகத்தில் போலீசாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஏலம் நடைபெறுவதை சிசிடிவி மூலம் பதிவு செய்யப்பட்டும், 10 க்கும் மேற்பட்ட LED டிவி மூலம்  ஒளிபரப்பட்டது. மிகவும் சொற்ப அளவிலேயே வியாபாரிகள் வந்திருந்தால், மாநகராட்சி அலுவலகமும் வெறிச்சோடி காணப்பட்டது.