ஆண்டுதோறும் பேரிடர் காலங்களில் புயல், மழை, வெள்ளம் போன்ற காரணங்களால் பயிர் பாதிப்புக்கு உள்ளாகும் விவசாயிகளுக்கு உறுதுணையாக பயிர் காப்பீடு இழப்பீடு திட்டம் இருந்து வந்துள்ளது. கடந்த காலங்களில் கஜா புயல், பருவம் தப்பி பெய்த பெருமழை, நிவர் புயல், புரெவி புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு தொகை மிகவும் உறுதுணையாக இருந்து வந்துள்ளது. ஒரு ஏக்கருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை பயிர் காப்பீடு பிரீமியம் தொகையாக செலுத்தியபின் பேரிடர் காலங்களில் பாதிப்பு ஏற்பட்டால் தமிழ்நாடு அரசு சார்பில் ஆய்வு செய்து கணக்கெடுத்து பயிர் பாதிப்புக்கு ஏற்ப பட்டியலைத் தயார் செய்து பயிர் காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்குவது வழக்கம். அதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கப்பட்டு வந்துள்ளது.
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சரான பின்னர் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு சட்டமன்றத்தில் வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். அதனை தொடர்ந்து சில தினங்களிலேயே கொரோனா பாதிப்பு காரணமாகவும், நிதிச்சுமை காரணமாகவும் 2020-21 ஆம் ஆண்டிற்கான குறுவை, சம்பா பயிர் காப்பீடு திட்டம் கிடையாது என வேளாண்துறை அமைச்சர் அறிவித்தார். இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் வேளாண் துறை செயலாளர் பயிர் காப்பீடு திட்டம் கிடையாது என அறிவிப்பு வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். 2020-21 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு திட்டத்தை ரத்து செய்த மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் முன்பாக விவசாயிகள் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உடனடியாக குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்கான பயிர் காப்பீடு திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மாவட்ட ஆட்சியர் முன்பாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்திற்கு பின்னர் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் முன்பாகவும் மாவட்ட வேளாண்துறை அதிகாரிகள் முன்பாகவும் தெரிவித்தனர்.