மின் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் பொறியாளர் சங்கம் வலியுறுத்தல்

 

மத்திய அரசு தொடர்ந்து விவசாயிகள் மற்றும் பொது மக்களை பாதிக்கக்கூடிய பல்வேறு சட்டத் திருத்தங்களைக் கொண்டு வருவதாக தொடர்ந்து தமிழ்நாடு அரசு தனது எதிர்ப்பை பதிவிட்டு வருகிறது. குறிப்பாக விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் 100 நாட்களையும் தாண்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதிதாக மத்திய அரசு மின் சட்ட திருத்த மசோதா கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு தனது எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பொறியாளர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



மத்திய அரசின் மின் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு மின்வாரிய பொறியாளர் சங்கம் மற்றும் அனைத்து இந்திய மின்வாரிய பட்டய  பொறியாளர்கள் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மத்திய அரசு நடந்து முடிந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் மின்சார சட்ட திருத்த மசோதா 2021ஐ தாக்கல் செய்ய முயன்றதை, தமிழ்நாடு அரசின் எதிர்ப்பு மற்றும் விவசாயிகள் போராட்டம் மற்றும் மின்வாரிய அனைத்து தொழிற் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக மசோதாவை நிறைவேற்றுவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகள் மற்றும் விவசாயத்திற்கு எதிராக மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்ட திட்டங்களை ரத்து செய்யக்கோரி தற்போது தமிழ்நாடு அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

 

இதுகுறித்து மின்வாரிய பொறியாளர் சங்கத்தினர் கூறுகையில் மத்திய அரசு மின்சார வாரியங்களை தனியார்மயமாக்கும் நோக்கத்தோடு மாநில அதிகாரத்தை தவிர்த்து இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற முயற்சி செய்கிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரை நேரில் சந்தித்து மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த வேண்டும். மேலும் தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பெரும்பான்மையான கட்சியினர் இந்த மின்சார சட்டத் திருத்த மசோதாவினை எதிர்த்து வருகின்றனர். பெரும்பாலான மாநிலங்களிலும் இந்த சட்டத் திருத்த மசோதாவிற்கு தனது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்த மின்சார சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால், இடை மானியம் நிறுத்தப்பட்டு விவசாயிகளுக்கு மற்றும் குடிசைகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யும் நிலை உருவாகும்.

 

வீடுகளுக்கு மின் கட்டணங்களை மாநில அரசே நேரடியாக மானியம் வழங்க முடியாமல், மின் கட்டணம் உயரும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த மின் வாரியங்கள் மத்திய அரசு நியமிக்கும் ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் வரும், அதன் காரணமாக மாநில அரசுகள் சமூக நிதி சார்ந்து மாநில மக்களின் தேவைகளுக்கு ஏற்ப செயல்படுத்த நினைக்கும் திட்டங்களுக்கு, இந்த சட்ட திருத்த மசோதா மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.



 

அத்தியாவசிய தேவையான மின்சாரம், தனியார் வசம் சென்று வியாபாரப் பொருளாக மாறக்கூடிய நிலை உருவாகும். இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள், எனவே அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் இந்த மின் சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றுவதை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும். என பொறியாளர் சங்கத்தினர் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.