முருங்கைக்கீரை பெண்களுக்கு ஏற்படும் ரத்தசோகை நோயை தடுக்கும்: உணவியல் துறை பேராசிரியை தகவல்

 

பெண்கள் அதிகளவில் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்ற புள்ளிவிபரம் வெளியாகியுள்ள நிலையில், அதனை தடுப்பதற்கு வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியை பல்வேறு தகவல்களை கூறியுள்ளார். குறிப்பாக கற்பக விருட்சம் என அழைக்கப்படும் முருங்கையின் மகத்துவம் குறித்தும், பெண்களுக்கு ஏற்படும் ரத்தசோகை நோயை தடுக்கும் முருங்கைக் கீரையின் மருத்துவ மகத்துவம் குறித்து, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் உணவியல் மற்றும் சக்தி இயல் துறை பேராசிரியை கமலசுந்தரி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்...

 

முருங்கை மரத்திலிருந்து முருங்கையின் கீரை, மற்றும் பூ, விதை, போன்ற பல பொருட்கள் எடுக்கப்படுகின்றது. மற்ற கீரைகளில் உள்ளதை விட இரும்புச்சத்து 25% அதிகமாக முருங்கைக்கீரையில் உள்ளது. ஆரஞ்சு பழங்களை விட வைட்டமின் சி சத்து ஏழு மடங்கு அதிகமாக உள்ளது. அதேபோன்று கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ சத்தை விட நான்கு மடங்கு சத்து முருங்கைக்கீரையில் அதிகமாக உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த முருங்கை கீரையை தினமும் நாம் சாப்பிட வேண்டும், அவ்வாறு சாப்பிட்டால் பல வகையான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம் என வேளாண்மை அறிவியல் நிலையம் உணவியல் பேராசிரியை கமலசுந்தரி தெரிவித்துள்ளார்.



 

மேலும் அவர் கூறுகையில் வாரத்தில் இரண்டு முறை முருங்கைகீரை அல்லது கீரையை உணவாக சாப்பிட்டால் பல நன்மைகள் உண்டாகும். முருங்கை கீரையை பெண்கள் தினமும் உணவில் சேர்த்து வந்தால் இரத்த சோகையை தடுக்கலாம். இக்கீரை இரத்த விருத்திக்கு மிகவும் பயன்படுகிறது. பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் இக்கீரையை உணவில் சேர்த்து வந்தால் பால் நன்றாக சுரக்கும். இக்கீரை சாற்றை ஒரு சங்கு அளவு தினமும் மூன்று வேளை சாப்பிட்டால் மணமாகாத பெண்களுக்கு ஏற்படும் சூதக வயிற்று நோயும், அடிவயிற்று வலியும் நீங்கும். முருங்கை கீரையை பலவகையான பொருட்களாக பதப்படுத்தி பயன்படுத்தலாம். முருங்கை கீரையில் இருந்து என்னென்ன பொருட்கள் தயாரிக்கலாம் என்றால், முருங்கைக் கீரையில் இருந்து ஒரு உலர் முருங்கை இலை, ஊறுகாய், ஜூஸ், சட்னி, சாஸ், உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கலாம்.

 

அதேபோல முருங்கைக்காயை உலர் முருங்கைக்காய், முருங்கைக்காய் பொடி, போன்றவையும் தயாரிக்கலாம். முருங்கை இலை பொடி செய்வதற்கு இலைகளை நன்றாக உலர்த்தி அதனுடன் மிளகாய், பருப்பு, வகைகளை கலந்து நாம் உணவில் சேர்த்துக் கொள்ளவும். ஜூஸ் தயாரிக்க 40 நாள் முருங்கை இலைகளை எடுத்து அதை நமது அரவை மில்களில் அரைத்து தண்ணீருடன் சர்க்கரையும் சேர்த்து இனிப்பு பானமாக அருந்தவும். ஊறுகாய் செய்வதற்கு இலைகளுடன் இதர பொருட்களை கலந்து பயன்படுத்தலாம். முருங்கை பூ பொடி செய்வதற்கு முருங்கை இலை பொடி உடன் தக்காளி, வெங்காய பொடி, மக்காச்சோள பொடி, சீரகம், மிளகுத்தூள், போன்றவைகளுடன் உப்பு கலந்து அதை நாம் எளிதாக சந்தை படுத்தலாம்.



 

முருங்கைக் கீரை, முருங்கைப்பூ, ஆகிய பொருள்களை எளிமையாக சந்தைப்படுத்தி நல்ல ஒரு தொழில் முனைவோராக முன்னேறலாம். மேலும் முருங்கை, முருங்கைப்பூவை எப்படி உணவில் பயன்படுத்தலாம் போன்ற பல பொருட்களை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் செய்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. ஆர்வமுள்ளவர்கள் வேளாண்மை அறிவியல் நிலையத்தை தொடர்பு கொண்டால் அங்கு பெண்களுக்கு முருங்கை கீரையின் அவசியம் குறித்தும் முருங்கையில் இருந்து உருவாக்கப்படும் பொருட்கள் அதன் மருத்துவ குணம் ஆகியவை குறித்தும் விளக்கம் அளிக்கப்படும் எனவும், வேளாண்மை அறிவியல் நிலைய உணவியல் மற்றும் சக்தி இயல் துறை பேராசிரியை கமலசுந்தரி தெரிவித்துள்ளார்.