தஞ்சாவூர் மாவட்டம் வண்ணாரப்பேட்டை ஊராட்சியில் சிவகாமிபுரம், 8 எண் கரம்பை, வண்ணாரப்பேட்டை என மூன்று கிராமம் உள்ளது. வண்ணாரப்பேட்டை கிராமத்தில், மாரியம்மன்கோயில் தெரு, அம்பேத்கார் நகர், அண்ணா நகர், ஆனந்தகாவிரிநகர், காமராஜர் நகர், மூப்பனார் நகர், நடுத்தெரு என 7 தெருக்களில், 700 க்கும் மேற்பட்ட வீடுகளும், 2500 பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பெரும்பாலானோர் விவசாயத் தொழிலை பாரம்பரியமாக செய்கின்றனர்.
 
இக்கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 40 முதல் 55 வயது வரை உள்ளவர்களுக்கு கிட்னி பாதிப்பு ஏற்பட்டு பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகாரளித்தனர். புகாரின் பேரில், வண்ணாரப்பேட்டை கிராமத்திற்கு வரும் தண்ணீரை மாதிரி  எடுத்து சோதனை செய்தனர். ஆனால் தண்ணீரில் எந்த விதமான மாற்றங்களும் இல்லை எனவும், தண்ணீரால் பாதிப்பு ஏற்படாது என கூறிவிட்டு சென்றனர்.



தஞ்சையில் ஒரு கிராமத்துக்கே கிட்னி பாதிப்பு.. வேதனையில் மக்கள்.. ஏன்? எப்படி?


ஆனால் வண்ணாரப்பேட்டை ஊராட்சிக்கும் வரும் தண்ணீரில் சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ளது. அந்த தண்ணீரை பிடித்து வைத்து சில நேரங்களில் சுண்ணாம்பு படிமங்கள் படிந்து விடும். இந்த தண்ணீரை உபயோகப்படுத்துவதால் தான் கிட்னி பாதிப்பு வருகின்றது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


தற்போது தெருவிற்கு 5 க்கும் மேற்பட்டோர் கிட்னியால் பாதிப்படைந்து வரும் நிலையில், தமிழக அரசு உடனடியாக, வண்ணாரப்பேட்டை ஊராட்சியிலுள்ள கிராம மக்களை கிட்னி பாதிப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும், போர் தண்ணீருக்கு பதிலாக கொள்ளிடம் அல்லது காவிரி நீரை குழாய் மூலம் ஊராட்சிக்கு கொண்டு வரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கல்லணை கால்வாயின் தெற்கு புறத்தில் 5 ஆழ் குழாய் மோட்டார்  அமைத்து குழாய் மூலம், வண்ணாரப்பேட்டை கிராமத்திலுள்ள 5 நீர்தேக்கத்தொட்டியில் தண்ணீர் நிரப்பபடுகிறது. அந்த தண்ணீரில் சுண்ணாம்பு சத்து அதிகமாகி படிமங்களாக படிந்து விடுவதால், அதனை பயன்படுத்துபவர்களுக்கு கிட்னி பாதிப்பு ஏற்படுகிறது என கூறுகிறார்கள்.


வண்ணாரப்பேட்டையில் கடந்த சில மாதங்களில், அண்ணாதுரை, தனபால், கர்ணன், கண்ணையன் சாமிநாதன் உள்ளிட்ட  சுமார் 30 க்கும் மேற்பட்டோர் கிட்னி பாதிப்பால் இறந்துள்ளனர். வீரசங்கு, சிவக்குமார், கிராம உதவியாளர் கலியமூர்த்தி என 50 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் டயாலீஸீஸ் செய்து வருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம், தண்ணீரை மாதிரி கொடுத்தோம். ஆனால் அவர்கள் தண்ணீரினால் எந்த விதமான பாதிப்பும் இல்லை என்று கூறி விட்டார்கள்.போரிலிருந்து தண்ணீரை தொட்டியில் ஏற்றி, பின்னர் வீடுகளுக்கு வழங்கப்படுகிறது. அந்த தண்ணீரை பிடித்து வைத்திருந்தாலோ அல்லது தண்ணீரை சூடாக்கினாலோ சுண்ணாம்பு படிமம் படிந்து விடுகிறது. அந்த சுண்ணாம்பினை கையில் எடுத்து பார்த்தால், மிகவும் கடினமாக திடமாக இருக்கின்றது. இந்த தண்ணீரால் தான் கிட்னி பாதிப்பு ஏற்படுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 




இது குறித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் செந்தில்குமார் மற்றும் சேகர் ஆகியோர் பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் புகாரளித்தும் பலனில்லாமல் போய் விட்டது. தற்போது பெரும்பாலானோர் கிட்னி பாதிப்பால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக முதல்வர் முக.ஸ்டாலினிடம், தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குடிநீர் கொண்டு வரும் பணி நடைபெற்று கொண்டிருக்கின்றது, அதே போல் வண்ணாரப்பேட்டை ஊராட்சிக்கும், கொள்ளிடம் அல்லது காவிரியிலிருந்து குடிநீரை குழாய் மூலம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனுவை கிராமம் சார்பார அளிக்கவுள்ளோம் என்றார்.


இது குறித்து தவமணி கூறுகையில், “எனக்கு திருமணமாகி 30 வருடமாகிறது. கடந்த 10 ஆண்டுகளாக தான் கிட்னி பாதிப்பு அதிகமாகியுள்ளது. ஆழ்குழாயிலிருந்து தண்ணீரை பயன்படுத்துவதால் தான் இந்த பாதிப்பு ஏற்படுகின்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதலைமுத்துவாரியில், ஊற்று பறித்து அதிலுள்ள தண்ணீரை சமைப்பதற்கும் மற்ற பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வந்தோம். அப்போதெல்லாமல், கிட்னி பாதிப்பு ஏற்படவில்லை. போர் தண்ணீரை பயன்படுத்துவதால் தான் பாதிப்பு ஏற்படுகின்றது. 
வசதி படைத்தவர்கள், ரூ. 40 கேன் தண்ணீரையும், ரூ. 11 ஆயிரத்திற்கு ஆர்ஒ வாட்டரும் பொருத்தி பயன்படுத்தி வருகின்றார்கள். இந்த தண்ணீரை பயன்படுத்துவதால், கிட்னி பாதிப்பு வரும் என்று தெரிந்தும், வசதி இல்லாததால், நாங்கள் அந்ததண்ணீரை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.




எனது மருமகனுக்கு கிட்னி பாதிப்பு ஏற்பட்டு, ரூ. 15 லட்சம் வரை செலவு செய்தும் பயனில்லாமல் இறந்து விட்டார். இது போல் இங்குள்ளவர்களின் குடும்பங்கள் நிர்கதியாக நிற்கும் போது வேதனையாக உள்ளது. இந்த கிராமத்திற்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடாக நினைகின்றோம்.  இதே நிலை நீடித்தால், இங்குள்ள ஆண்களுக்கு, வெளியுரிலிருந்து பெண்ணை தரமாட்டார்கள். பெண்ணை எடுக்க மாட்டார்கள் என்ற நிலைவிரைவில் வந்து விடுமோ என்ற அச்சம் தோன்றுகிறது. எனவே, தமிழக அரசு, வண்ணாரப்பேட்டை ஊராட்சியில் தற்போது அதிகரித்து வரும் கிட்னி பாதிப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால், அவ்வூராட்சியின் நிலை கேள்வி குறியாகும்” என்றார்.


கிட்னி பாதித்த கிராம உதவியாளர் கலியமூர்த்தி கூறுகையில், “எனக்கு கடந்த 2 வருடமாக 2 கிட்னியும் பாதித்து விட்டது. இதுகுறித்து நான் கவலைப்பட்டால், விரைவில் இறந்து விடுவேன். அதனால் நான் கிட்னி பாதிப்பு குறித்து கவலைப்படமாட்டேன்” என கவலை இல்லாமல் வாய் திறந்து சிரித்தவாரே கூறினார். மேலும், “வசதிகள் இல்லாததால், பாதிப்பு ஏற்படுத்தி வரும் தண்ணீரை குடித்து வாழ்ந்து வருகின்றோம். மாதந்தோறும் ரூ. 1000 மாத்திரைகளை சாப்பிடுகிறேன். மிகவும் சிரமமாக இருக்கின்றது.  கண்டிப்பாக மனிதன் இறந்து போவான், அதனை நினைத்து அழுதோம் என்றால், வாழும் நாள் முழுவதும் நரகமாகி விடும். அதனால் நான் கவலைப்படாமல் வாழ்ந்து வருகின்றேன்” என்றார்.




கிட்னி பாதிப்பு சிகிச்சை பெற்று வரும் சிவக்குமார் கூறுகையில், “எனக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்தாண்டு கால்கள் வீங்கியது. மருத்துவரிடம் சென்ற போது, உப்பு அதிகமானதால், கால்கள் வீங்கியுள்ளது என்று மருந்துகளை கொடுத்தார்கள்.சில நாட்களுக்கு பிறகு, உங்களது 2 கிட்னியும் பாதித்து விட்டது என கூறினார்கள். அதனால் டயாலீஸீஸ் செய்ய வேண்டும் என கூறியதால், போதுமான வருமானம் இல்லாமல் கடன்களை வாங்கி விவசாயம் செய்து அதில் வரும் வருமானத்தை வைத்து சிகிச்சை பெற்று வருகின்றேன். தற்போது நாளுக்கு நாள் பாதிப்பு அதிகமாகி வருவதால், வேலைக்கு செல்ல முடியவில்லை. குடும்பத்தை நடத்துவதற்கே மிகவும் சிரமமாக உள்ளது. எதனால் கிட்னி பாதிப்பு ஏற்படுகிறது என இதுவரை யாரும் கண்டு பிடிக்க வில்லை. எங்கள் ஊரில் பாதிக்கப்பட்டு வருபவர்கள் குறித்து, எந்த  அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருந்து வருகின்றார்கள். மாவட்ட நிர்வாகம், வண்ணாரப்பேட்டை ஊராட்சியில் கிட்னி பாதிப்பு குறித்து நிபுனர் குழு அமைத்து கண்டு பிடிக்க வேண்டும், கிட்னி பாதிப்பால் ஏழ்மையிலுள்ள குடும்பத்திற்கு நிதியுதவி செய்யவேண்டும்” என வேதனையுடன் தெரிவித்தார்.


விவசாயிகளிடம் இருந்து அன்னிய படுவதை அதிமுக உறுதிப்படுத்தி உள்ளது- பி.ஆர்.பாண்டியன்