திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நேதாஜி சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது... தமிழகத்தில் பெய்த கனமழையின் காரணமாக சென்னை டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கனமழையின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று நாகை மாவட்டம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நெல் பயிர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெல் பயிர்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் நிவாரணம் அறிவித்துள்ளது அது போதுமானதல்ல. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்துவது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் அப்படி வழங்கினால் தான் விவசாயிகள் தங்களுடைய இழப்பை சரி செய்ய முடியும். கனமழையின் காரணமாக தொகுப்பு வீடுகள், மேலும் பள்ளி கட்டிடங்கள் கால்நடை உள்ளிட்டவைகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன அதனையும் கணக்கீடு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.




தமிழ்நாடு அரசு நீர் மேலாண்மைக்கு வல்லுநர் ஜனகராஜ் தலைமையில் குழு அமைத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கூறுவது என்னவென்றால் உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலகட்டத்தில் மிக அதிக கன மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த காலகட்டத்தில் நீர்நிலைகள் ஏரிகள் உள்ளிட்டவைகளை தூர்வாரி அதன் கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும். அப்படி செய்தால் தான் நீரை சேமிக்க முடியும். சென்னை டெல்டா மாவட்டங்களில் இனிவரும் காலங்களில் மழையால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு முன்கூட்டியே திட்டங்களை வகுத்து மழைநீரை சேமிப்பதற்கு உரிய நடவடிக்கையை வல்லுனர்களும் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக சென்னை மாநகரத்தில் நீர்நிலைகளை சரி செய்து வைத்திருந்தால் மழை வெள்ள காலங்களில் சென்னையை மழையால் பாதிக்கப்படக்கூடிய நிலை ஏற்படாதவாறு இருந்திருக்க முடியும்.




மக்களவையில் பாஜக அமைச்சர் கடந்த ஆறு வருடங்களில் 5 லட்சம் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் பல லட்சம் பேர் வேலை இழந்துள்ளார்கள். மத்திய மோடி அரசு அழிவிற்கான பொருளாதாரக் கொள்கையை கடைபிடித்து வருவதற்கு இது முக்கிய உதாரணமாக உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு 3 வேளாண் சட்டங்களையும் மக்களவையில் விவாதிக்காமல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதே போன்று தற்போது மீண்டும் மக்களவையில் விவாதிக்கபடாமலேயே இந்த மூன்று வேளாண் சட்டங்களும் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. விவசாயிகள் கேட்பது என்னவென்றால் மூன்று வேளாண் சட்டங்களை நீக்குவது மட்டும் போதாது விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களுக்கு ஆதார விலையை தருவதை ஒரு சட்டபூர்வமாக உத்தரவாதம் தர வேண்டும். நாடாளுமன்றத்தில் மின்சார மசோதா தாக்கல் செய்தது அப்படியே உள்ளது அந்த திட்டத்தையும் ரத்து செய்யவேண்டும். உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களை வைத்து வேளாண் சட்டங்களை மத்திய அரசு தற்போது ரத்து செய்துள்ளது. விவசாய போராட்டம் தொடங்கிய பின்னர் உத்தரபிரதேசம் பஞ்சாப் அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவினர் மத போராட்டங்களை உண்டு பண்ண முடியவில்லை. குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்று சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுதான் பாஜகவிற்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டெல்டா மாவட்டங்களில் பயிர் காப்பீடு அறிவித்தும் பல பகுதிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்கவில்லை என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். ஆகையால் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்காப்பீடு கிடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நடந்து முடிந்த 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் சில மாவட்டங்களில் திமுகவுடன் உடன்பாடு இருந்தது. சில மாவட்டங்களில் உடன்பாடில்லை. வருகிற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி பேரூராட்சி மாநகராட்சி தலைவர்களுக்கு நேரடித் தேர்தல் நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மேலும் திமுகவுடன் கூட்டணி பொருத்தவரை கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கூடி முடிவெடுக்கும் என கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.