வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 15 தினங்களுக்கு மேலாக இடைவிடாது தினசரி கன மழையானது கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு ஆய்வு குழு அமைத்து தமிழக முதலமைச்சரும் நேரில் ஆய்வு செய்து திருவாரூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாரான குறுவை பயிர்கள் அதேபோல 40 நாட்கள் வயதுடைய சம்பா மற்றும் தாளடி பயிர்கள் சுமார் 42 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த 10 தினங்களுக்கு முன்னர் அரசு அறிவித்தது.
அதற்குப் பின்பாக திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இரண்டு முறை சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கி சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அழுக தொடங்கியுள்ளன. இதன் காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த சாகுபடியை மேற்கொள்ள அரசு உடனடியாக நிவாரணத் தொகை அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல நெல்பயிர் மட்டுமின்றி பாதிக்கப்பட்டுள்ள மரவள்ளிக்கிழங்கு, தென்னை, வாழை, வெற்றிலை போன்ற பயிர்களுக்கும் உரிய நிவாரண இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். மேலும் வேளாண்துறை அதிகாரிகள், கூட்டுறவுத்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் என அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த நிலையில் கடந்த 15 தினங்களுக்கு மேலாக திருவாரூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சுமார் 50,000 ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுக தொடங்கியுள்ளதாகவும், இதனை கருத்தில் கொண்டு உடனடியாக மாவட்ட நிர்வாகம் தமிழக அரசுக்கு அறிக்கையை அனுப்பி ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 30 ஆயிரம் நிவாரணம் பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் முன்பாக விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் இடுப்பட்டனர். மேலும் பயிர் காப்பீடு செய்த விவசாயிகள் பாதிக்கும் மேலானவர்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை என்றும், இன்று வரை மாவட்டம் முழுவதும் பல பகுதிகளில் பயிர் காப்பீடு தொகை முழுமையாக வழங்கப்படவில்லை என்றும் விவசாயிகள் குற்றஞ்சாட்டினர். சிறிதுநேர ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு விவசாயிகள் குறைதீர் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.