கும்பகோணம் மகாமக விழாவிற்கு சிறப்பு பெற்றதாகும்.

  இவ்விழா  மகாமககுளத்தின் நீரினை  கொண்டு நடைபெறும் பெருவிழாவாகும். கும்பகோணம் நகரப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு மகாமககுளம், பொற்றாமரை, வராகபெருமாள் குளம், ஆயிகுளம், சேய்க்குளம், பிடாரி குளம், பைராகிகுளம், பாணாதுறை குளம், அனுமந்தகுளம்,ரெட்டிராயர் குளம்  உள்ளிட்ட  45 குளங்களுக்கு மேல் இருந்துள்ளன.  இந்த குளங்களுக்கு காவிரி மற்றும் அரசலாற்றிலிருந்து வாய்க்கால்களாக பிரிந்து அதற்கென்று உரிய நீர் வழிப்பாதைகள் மூலம் ஒரு சில குளங்களில் நிரம்புகின்றன. பின்னர் அதனுடன் இணைக்கப்பட்ட குளங்களுக்கு சென்று வெளியேறும் பாதைவழியாக வெளியேறிவிடும். முன்னோர்கள் எக்காலத்திலும் தண்ணீர் கஷ்டம் வந்து விடக்கூடாது என்பதற்காக இது போன்று  குளங்களையும் அமைத்துள்ளனர்.




மேலும் இக்குளங்களுக்கு காவிரி ஆற்றிலிருந்து உள்ளூர், தேப்பெருமாநல்லுார், பழவத்தான்கட்டளை, திருபுவனம் ஆகிய நான்கு வாய்க்கால்களிலிருந்தும், அரசலாறு மூலமாக ஒலைப்பட்டிணம் வாய்க்கால்களிலிருந்து தண்ணீர் பிரிந்து அந்தந்த குளங்களுக்கு தண்ணீர் நிரம்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து குளங்களும் ஆக்ரமிக்கப்பட்டும், நீர் வரும் பாதைகள் மற்றும் நீர் வெளியேறும் பாதைகளை மறைத்து, வீடுகள், கடைகள் உள்ளிட்டவைகள் கட்டப்பட்டன. இதனால் கும்பகோணம் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் தண்ணீர் பிரச்சனை உருவானது. மேலும் வாய்க்கால் பகுதியில் தண்ணீர் வராததால் குப்பைகள், சில இடங்களில் வீடுகளில் உள்ள கழிவுகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு பரவும் அபாய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 2016 ஆம் மகாமகத்தின் போது சமூக ஆர்வலர்கள் கும்பகோணத்தில் காணாமல் போன அனைத்து குளங்களையும் மீட்கப்படவேண்டும், நீர் வரத்து வெளியேறும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை மீட்டெடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, நீதிமன்றம் ஒய்வு பெற்ற நீதிபதி சோலைமலையை விசாரணைக்காக அமைத்தனர். இதன் அறிக்கையையும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.



 இதில் குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், நீர் வரத்து வெளியேறும் பாதைகளில்  உடனடியாக ஆக்ரமிப்புகளை அகற்றி மீட்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்  பேரில் வாய்க்கால் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளங்களை மீண்டும் உருவாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு, அனைத்து பணிகள கூட  இது வரை முழுமை பெறவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவிட்டும்,  அதிகாரிகள், குளங்கள் மற்றும் நீர் வரத்து மற்றும் வெளியேறும் பாதைகளை மீட்கப்படாமல், பணிகள் முழுவதையும் கிடப்பில் போடப்பட்டுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம், கும்பகோணத்தில் நீலத்தடிநீர் மட்டம் குறையாமல் இருக்கவும்,  தண்ணீர்பிரச்சனை ஏற்படாமல் இருக்கவும் உடனடியாக வாய்க்கால்களை துார் வாரியும், குளங்கள் மீண்டும் தூர் வார வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




இது குறித்து கும்பகோணம் அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர்  சத்தியநாராயணன் கூறுகையில், கும்பகோணத்தில் உள்ள குளங்கள், ஆறுகள், வாய்க்கால்கள் அனைத்தும் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை முறையாக பராமரிக்கப்பட்டது. அதன் பிறகு வந்த அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டதாலும், ஆறுகளில் தண்ணீர் வராததாலும் , வாய்க்கால்கள், குளங்களை  ஆக்கிரமிப்புகளை உள்ளாக்கி விட்டு விட்டனர்.  மேலும்  ஆற்றிலுள்ள மணல்களை கொள்ளை அடித்ததால், ஆறுகள் தாழ்ந்தும், வாய்க்கால்கள் உயர்ந்ததால், கும்பகோணத்திற்குள் ஒடும் 5 வாய்க்கால்களிலும் தண்ணீர் வரவில்லை. இதனால் குளங்கள், வாய்க்கால்கள் துார்ந்து போனதால், நிலத்தடி நீர்மட்டும் குறைந்து, 20 அடி ஆழத்தில் போடப்பட்ட ஆழ்குழாய் தற்போது 100 அடிக்கு மேல் தான் ஆழ்குழாய் போடப்படும் நிலை உருவாகியுள்ளது. 




சமூக  ஆர்வலர்கள் குளங்கள், வாய்க்கால்கள், நீர் வரும், வெளியேறும் பாதைகளை துார் வாரி பராமரிக்கப்படவேண்டும் என கோரிக்கை வைப்பார்கள். அதனை கோரிக்கையை பெற்று கொண்டு, பெயரளவிற்கு பணிகளை செய்து விட்டு, அனைத்து பணிகளும் முடிந்து விட்டது என கணக்குகளை காட்டி விடுவார்கள். இதே போல் கடந்த 2016ஆம் மகாமகத்தின் போது பராமரிப்பு பணிக்காக  கோடிக்கணக்கான  நிதி ஒதுக்கியும், அந்த நிதியில் செய்யப்பட்ட பணிகள் என்ன என்பது இன்னமும், கும்பகோணம் மக்களுக்கு புரியாத புதிராக உள்ளது. அனுபவமுள்ள அதிகாரிகளை கொண்டு கும்பகோணத்தில் உள்ள 5 வாய்க்கால்களையும், குளங்களையும் துார் வாரி தண்ணீர் விட வேண்டும். 


ஆறுகளில் மணல் கொள்ளையடிப்பவர்களை, அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கினால் மட்டுமே தான்  இனி வருங்காலங்களில் கும்பகோணம் நகரத்தை தண்ணீர் பஞ்சமின்றி காப்பாற்ற முடியும்.  பல ஆண்டுகளாக இதே நிலை நீடிப்பதால், குளங்களையும், வாய்க்கால்களையும் பார்ப்பதற்கே வேதனையாக உள்ளது என்றார். இது குறித்து ஜோதிமலை இறைப்பணித்திருக்கூட்ட நிறுவனத்தலைவர் திருவடிக்குடில் சுவாமிகள் கூறுகையில், குளங்களில் நீர் தேக்கி வைப்பதால், நீர் மட்டம் உயரும். கால்நடைகள், பறவைகள், நீர்வாழ் உயிர்கள் பயனடையும். கும்பகோண்த்தில் உள்ள சூரிய மற்றும் சந்திரன் குளங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு தூர்க்கப்பட்டது. தற்போது மீட்கும் முயற்சிகள் இருந்தாலும், அப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதே போல் கும்பகோணத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் துார் வாரி சீரமைக்கும் பணிகள் நடந்தாலும், அனைத்து பணிகளும் கிடப்பிலும்.சில குளங்கள் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருவது வேதனையான விஷயமாகும். கடந்த சில வருடங்களாக சில குளங்களில் எந்தவிதமான பணிகள் நடைபெறவில்லை. கும்பகோணத்தில்  உள்ள அனைத்து குளங்களையும் துார் வாரி, சீர் செய்து, தனியார் நிறுவனங்கள் மூலம் பராமரிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை உயரதிகாரிகளை கொண்டு கண்காணிக்க வேண்டும்.  மேலும்  கும்பகோணம் பகுதியில் காணாமல் போன காங்கேயன் குளம், கொத்தன்குளம், கோடியம்மன் குளம் உள்ளிட்ட குளங்களை கண்டுபிடித்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி மீண்டும் குளங்களாக்க வேண்டும் என்றார்.