தஞ்சாவூர் அருகே முன்விரோதம் காரணமாக ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சை பகுதியில் இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


தஞ்சாவூர் அருகே பொத்தேரி பாளையம், கங்கா நகரைச் சேர்ந்தவர் சுவாமிநாதன் (36). ரவுடி. இவர் மீது மூன்று கொலை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. இவரது அண்ணன் விஜய் என்பவரை சிலர் வெட்டி கொலை செய்து விட்டனர். இதனால் இவர் தஞ்சையில் இல்லாமல் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தங்கியிருந்தார்.  வழக்குகளுக்காக கோர்ட்டில் ஆஜராவதற்கு வரும் போது மட்டும் தனது வீட்டிற்கு வந்து தங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் சுவாமிநாதன் சுந்தரபாண்டியன் நகர் பகுதியில் சிலரால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.


தகவலறிந்த கள்ளப்பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுவாமிநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் சுவாமிநாதனை கொலை செய்தவர்களை தேடி வந்தனர். அப்போது சுந்தரபாண்டிய நகரை சேர்ந்த முத்துக்குமார் (30), பங்கஜ்குமார் (24), பிருந்தாவனத்தை சேர்ந்த அபிசாய் (25),  பள்ளியக்ரஹாரம் பகுதியை சேர்ந்த செபாஸ்டின் (20),  பொத்தேரி பாளையத்தை சேர்ந்த ஹரிஹரன் (24) காமாட்சியம்மன் தோட்டம் பகுதியை சேர்ந்த மாதவன் (25) ஆகிய 6 பேரும் சுவாமிநாதனை கொலை செய்தது தெரியவந்தது.


பின்னர் அவர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் சுவாமிநாதனும், ஹரிஹரனும் உறவினர்கள். சுவாமிநாதன் அண்ணன் விஜய் கொலை வழக்கில் தொடர்புடையவர்களுடன் ஹரிஹரன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதனால் சுவாமிநாதனுக்கும் ஹரிஹரனுக்கு தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் ஹரிஹரன் உட்பட 6 பேரும் மணல் கடத்தி விற்று அதிக வருமானம் பார்த்து வந்துள்ளனர். இதுவும் மோதலுக்கு காரணமாக அமைந்துள்ளது.


இந்நிலையில் தீபாவளிக்கு முன்னதாக பொன்னமராவதியில் இருந்து வழக்கம் போல் கோர்ட்டில் ஆஜராக சுவாமிநாதன் தஞ்சைக்கு வந்துள்ளார். அப்போது  ஹரிஹரனும், அபிசாய் என்பவரும் ஒன்றாக சுற்றியதை பார்த்த சுவாமிநாதன் குடிபோதையில் இருவரிடமும் தகராறு செய்து தாக்கியுள்ளார். அப்போது எங்கள் பகுதிக்கு வந்து பார் என்று அபிசாய் திட்டிவிட்டு ஹரிஹரனுடன் முத்துக்குமார் வீட்டிற்கு வந்து நடந்ததை தெரிவித்துள்ளார்.


அப்போது அங்கு பங்கஜ்குமார், செபாஸ்டின், மாதவன் ஆகியோரும் இருந்துள்ளனர். இதற்கிடையில் முத்துக்குமார் வீட்டுக்கு வந்த சுவாமிநாதன் போதையில் தகராறு செய்ய கோபமடைந்த 6 பேரும் அங்கேயே அரிவாள் மற்றும் கத்தியால் சுவாமிநாதனை வெட்டி கொலை செய்துள்ளனர் என்று தெரிய வந்தது. இதையடுத்து கள்ளப்பெரம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாமஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.