தஞ்சாவூர்: தஞ்சாவூரில் அதிக அளவில் புழக்கத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இல்லாததால் வங்கிகளுக்கு பணத்தை மாற்ற வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே உள்ளது.


புழக்கத்தில் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பபெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த 19ம் தேதி அறிவித்தது. அதாவது மக்கள் தங்களிடம் உள்ள நோட்டுகளை 23ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கி கணக்கில் செலுத்திக் கொள்ளலாம். ரூ. 2 ஆயிரம் நோட்டை வங்கியில் கொடுத்து வேறு நோட்டுக்களாக மாற்றி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி மக்கள் தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றி கொண்டு வருகின்றனர். 


2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்ற வரும் வாடிக்கையாளர்கள், மக்களுக்கு விரைவாகவும், வசதியாகவும் சேவையை வழங்க தேவையான ஏற்பாடுகளை வங்கிகள் செய்து இருந்தன. ஏற்கனவே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறப்பட்டது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் வங்கிகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் சூழல் காணப்பட்டால் அது மேலும் பேசும்பொருளாகும் என்பதால் அதை தவிர்க்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை வங்கி நிர்வாகங்கள் செய்து இருந்தன.




கடந்த 2016ம் ஆண்டு பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் மதிப்பிழப்பு செய்வதாக அறிவித்த போது அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கிகள் முன் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் சிலர் உயிரிழந்ததும் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.


அதுபோன்று விமர்சனம் தற்போது வந்துவிடக்கூடாது என்பதில் வங்கி நிர்வாகத்தினர் மிகுந்த கவனத்துடன் உள்ளனர். ஆனால் நிலைமை தலைகீழாக உள்ளது. தஞ்சை மாநகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு அதிகளவில் யாரும் வரவில்லை என்பதுதான் பெரும் ஆச்சரியம். 


சிலபேர் வந்தாலும் அவர்களும் 4 அல்லது 5 நோட்டுகள் மட்டுமே கொண்டு வந்து தங்களது வங்கி கணக்கில் செலுத்திவிட்டு செல்கின்றனர். இதேபோல் நிலைமை தான் மாவட்டம் முழுவதும் உள்ள வங்கிகளில் காணப்படுகிறது.  


இதுகுறித்து வங்கி அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்,  ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் மதிப்பிழப்பு செய்தபோது வங்கிகள் முன்பு மக்கள் காத்திருந்தனர். கூட்டம் அலைமோதியது. ஆனால் தற்போது அதுபோன்ற நிலை இல்லை.


ஒரு சிலர் மட்டுமே வந்து குறைந்த அளவிலான நோட்டுகளை கொடுத்துவிட்டு, வங்கி கணக்கில் வரவு வைத்துவிட்டு சென்றனர். ஏற்கனவே பெரும்பாலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு வந்துவிட்டது. குறைந்த அளவே புழக்கத்தில் இருந்ததால் பெரிய அளவில் மக்கள் கூட்டம் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.