தஞ்சாவூர்: உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் இந்தாண்டு நவராத்திரி கலை விழா கடந்த 15ம் தேதி தொடங்கியது. வரும் 24ம் தேதி வரை இவ்விழா நடக்கிறது. இதில் தினமும் அம்மனுக்கு பல்வேறு அலங்காரம், சிறப்பு வழிபாடு நடக்கிறது.


நவராத்திரி விழா என்பது மக்களை துன்புறுத்தி வந்த மகிசாசுரன் என்ற அரக்கனுடன், ஆதிபராசக்தி 9 நாள்கள் போரிட்டு 10ம் நாளில் வதம் செய்து வெற்றிகொண்டதாக நம்பப்படுகிறது. இதனை நினைவுகூரும் வகையில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியில் பராசக்தியான துர்கா பரமேஸ்வரியையும், மகாலஷ்மியையும், சரஸ்வதி தேவியையும் வணங்குகிறோம். பராசக்தி மூன்றாக இருந்தாலும், முப்பத்து முக்கோடியாக இருந்தாலும், அத்தனையாகவும் இருப்பது ஒரே பராசக்திதான்.
 
நவராத்திரி பண்டிகை உலக நலத்துக்காக, தன்னை நம்பும் பக்தர்களுக்காக ஸ்ரீமஹாதேவி பிரசன்னமாகி மகிஷாசுரவதம் நடத்தி, தன் குழந்தைகளை எப்படியும் காப்பாற்றுவேன் என்று பறைசாற்றும் நாளே விஜயதசமி நன்நாளாகும். தாய் ஆதிபராசக்தியே லக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதி என முப்பெரும் தேவிகளாக ரூபம் கொண்டு வாழத் தேவையான ஐஸ்வர்யம், ஞானம், வீரம் போன்றவற்றை அருள்கிறாள். அன்பின் சொரூபமான அவள் நம்மிடம் எதிபார்ப்பது ‘ஆத்ம சரணாகதி' என்ற தூய அன்பை மட்டுமே.
 
நவராத்திரி கொலுவில் இடம்பெறும் பிரமாண்டமான மலைகள், பலவகையான பாதாள குகைகள்,  நிறைய நீர்வீழ்ச்சிகளுடனான ஆறுகள், எரிமலை நெருப்பு, ஹோமகுண்ட அக்னியுடனா புகைமண்டலம், பாற்கடலில் மகாவிஷ்ணு, தியானசக்தி அதிர்வுகளுடன் சமுத்ரம், பிரமீடு குகை சப்தங்கள், புயல் மற்றும் தென்றல் காற்று சக்தி, பலவித மிருகங்கள் பறவைகள் சத்தத்துடனான சந்தனகாடு, ஐஸ்வர்யலஷ்மி குகை, மஹாகாளியின் ராட்ஷசசம்ஹார மஹிஷாசுரமர்த்தினிக் கோலம், சம்ஹாரகோலம், மலைகுகைகள், ஆற்று ஊற்றுக்கள், ருத்திராட்ச மரங்கள், மற்றும் பலவித அதிசய சக்தி வாய்ந்த தெய்வீகப் பொருட்களுடன் பிரபஞ்சசக்தியை கொணர்ந்து வீட்டு கொலுவில் வைத்து பூஜிப்பதால் அம்பாளின் அருளை பெறலாம்.




இத்தகைய சிறப்பு பெற்ற நவராத்திரி விழா உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி கலைவிழா கடந்த 15- தேதி தொடங்கியது. வரும் 24-ம் தேதி வரை இந்த விழா நடக்கிறது. இதில் பெரிய நாயகி அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அலங்காரம் செய்யப்படுகிறது.  
 
அதன்படி கடந்த 17-ம் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்ட நிலையில் மாலையில் பெரிய நாயகி அம்மனுக்கு சதஸ் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெரிய நாயகி அம்மனை தரிசித்தனர். மேலும் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. 


நேற்று 18-ந் தேதி காயத்ரி அலங்காரமும்,  இன்று 19-ந் தேதி அன்னபூரணி அலங்காரமும், நாளை 20-ந் தேதி கஜலட்சுமி அலங்காரமும், வரும் 21-ந் தேதி சரஸ்வதி அலங்காரமும், 22-ந் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 23-ந் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், 24-ந் தேதி விஜயதசமி அலங்காரமும் செய்யப்படுகிறது.


தினமும் நவராத்திரி கலைவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வருகின்றனர். தஞ்சை பகுதி மக்கள் மட்டுமின்றி பிற மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள், சுற்றுலாப்பயணிகளும் நவராத்திரி விழாவில் பங்கேற்று வருகின்றனர்.