LEO Release: தஞ்சாவூர்: டிரெய்லரில் ஆபாச வார்த்தை, இசை வெளியீட்டு நிகழ்ச்சி ரத்து, சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி ரத்து என்று பல்வேறு சர்ச்சைகள், பிரச்னைகளுக்கு மத்தியில் இன்று காலை 9 மணி காட்சியுடன் தஞ்சாவூரில் லியோ படத்தை ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் விஜய் ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படம் இன்று வெளியாகி உள்ளது. தமிழக அரசியலில் கால் பதிக்க, ஆயத்த பணிகளை விஜய் துவக்கினார். இதற்காக தனது மாவட்ட நிர்வாகிகளை அடுத்தடுத்து சந்தித்தார். மகளிரணி, வக்கீல் பிரிவு அணி என்று அவரது வேகம் பிடித்தது. இந்நிலையில்தான்  அவரது படம் லிடயோ வெளியாவது, எதிர்பார்ப்புகளை அதிகரித்த செய்தது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.


அதற்கேற்ப படத்தின் டிரெய்லரில் விஜய் பேசிய ஒரு ஆபாச வார்த்தை பெரும் சர்ச்சைக்குள்ளானது. பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவர்களுக்கு உதவிகள் செய்பவர் இதுபோன்று ஒரு வார்த்தையை எப்படி கூறலாம் என்று சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பினர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தில் கெட்ட வார்த்தை பேசியது நடிகர் விஜய் அல்ல. அவர் ஏற்றிருந்த கதாபாத்திரம். அதற்கு நானே பொறுப்பேற்கிறேன். படத்தில் அந்த வார்த்தை நீக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.


தொடர்ந்து படத்தில் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இதையடுத்து படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடக்கும் என அறிவிக்கப்பட்டு, பிறகு ரத்து செய்யப்பட்டது. இதன் பின்னணியில் அரசியல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. விஜய்க்கு ஆதரவாக பல்வேறு கட்சி தலைவர்களும் குரல் எழுப்பினர். மேலும் படத்தின் டிரெய்லர் வெளியானபோது சென்னையில் ரோகிணி தியேட்டர் இருக்கைகள், ரசிகர்களால் உடைத்தெறியப்பட்ட சம்பவமும் கண்டனத்திற்கு உள்ளானது. இதற்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்,  இசை வெளியீட்டு விழாவுக்கு, 70,000 - 80,000 பேர் வரை கூடுவர். அப்போது அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதற்காக, அந்நிகழ்ச்சியை ரத்து செய்தோம். ரோகிணி தியேட்டரில் இருக்கைகள் உடைக்கப்பட்டது தவறுதான் என்று தெரிவித்தார்.






இதற்கு அடுத்ததாக எழுந்த பிரச்னைதான் விஜய் ரசிகர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியது. படத்தின் சிறப்பு காட்சிக்கு, தமிழக அரசு அனுமதி கொடுக்குமா, மறுக்குமா என்ற விவாதங்கள் எழுந்த நிலையில், தமிழக அரசு இன்று முதல் 24ம் தேதி வரை, தினசரி காலை 9 மணி முதல் நள்ளிரவு 1:30 மணி வரை, ஐந்து காட்சிகள் நடத்திக்கொள்ள, அனுமதி அளித்தது.


அதிகாலை 4:00 மணி மற்றும் 7:00 மணி காட்சிக்கு, அனுமதி மறுக்கப்பட்டது. இதற்காக தயாரிப்பு நிறுவனம் சார்பில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்க முடியாது. காலை 7 மணி காட்சி திரையிட, அரசிடம் முறையிடுங்கள். அரசு திரையரங்க உரிமையாளர்களுடன் பேசி, பரிசீலிக்க உத்தரவிடுகிறேன் என்று தீர்ப்பு கூற கிரிக்கெட்டில் கடைசி ஓவரில் வெற்றி பெற சில ரன்கள் தேவை என்ற கிளைமாக்ஸ்சில் எப்படி ரசிகர்கள் இருப்பார்களோ அதுபோல்தான் விஜய் ரசிகர்களும் அதிகாலை காட்சி இருக்குமா? இருக்காதா என்ற படபடப்புடன் இருந்தனர். 


தொடர்ந்து, காலை 7 மணிக்கு படத்தை திரையிட அனுமதி கோரி லியோ படக்குழு சார்பில் அளிக்கப்பட்ட மனுவும் ஏற்கப்படவில்லை. இதற்கிடையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம், 'அரசு அறிவித்த நேரத்திற்குள், படங்களை திரையிட, தயாராக உள்ளோம். ஏற்கனவே, காலை 9 மணி காட்சி என 20ம் தேதியில் இருந்து முன்பதிவு செய்துள்ளோம். இப்போ திடீரென்று காலை 7 மணி காட்சிக்கு அனுமதி என்றால் நிச்சயம் பிரச்னை வரும் என்று ஜகா அடித்து அரசு சொல்வதை ஏற்க தயாராக உள்ளோம் என ஸ்டேட்மெண்ட் விடுத்தனர்.


ஆனால் காலை 9 மணிக்கு முன்பாக படம் திரையிட அரசு அனுமதி அளிக்கவில்லை. நேற்று காலை சில திரையரங்குகள், அரசு அனுமதித்துள்ள நேரத்தில், ஐந்து காட்சிகள் திரையிடுவது சிரமம். எனவே, லியோ படத்தை திரையிடவில்லை என அடுத்த பிரச்னையை எழுப்ப, லியோ படக்குழுவினருக்கு பெரும் தலைவலியாகி விட்டது. தொடர்ந்து படக்குழுவினர் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பிறகு, அந்த திரையரங்குகளும் படத்தை திரையிடுகிறோம் என்று தெரிவித்தனர். இப்படி டிரெய்லரில் ஆரம்பித்து இசை வெளியீடு, சிறப்பு காட்சி என்று ரிலீஸ் வரை லியோ படத்திற்கான சர்ச்சைகள் நீண்ட நிலையில் இன்று காலை 9 மணி காட்சியை காண தஞ்சாவூர் விஜயா திரையரங்கிற்கு ரசிகர்கள் குவிந்தனர். ஆட்டம், பாட்டம், துள்ளாட்டம் என்று திருவிழா கோலம் போல் திரையரங்கள் காட்சியளித்தது. 


ரசிகர்கள் காலை 7 மணி முதல் தியேட்டர் முன்பு குவிந்திருந்தனர். திரும்பிய இடமெல்லாம் பிளக்ஸ், போஸ்டர் என்று கலக்கி இருந்தனர் ரசிகர்கள். இடையில் டிக்கெட் விலை அதிகம் என்று சிறிது நேரம் சலசலப்பும் ஏற்பட்டது.