தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 12 கிமீ வேகத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தற்போது அது தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டு திருகோணமலைக்கு (இலங்கை) கிழக்கே 570 கி.மீ., யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 710 கி.மீ கிழக்கு-தென்கிழக்கே (இலங்கை), காரைக்காலில் இருந்து சுமார் 770 கி.மீ கிழக்கு-தென்கிழக்கே மற்றும் சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 830 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது.
இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை வேளையில் மேலும் படிப்படியாக புயலாக வலுப்பெற்று, டிசம்பர் 8 -ஆம் தேதி காலை வட தமிழ்நாடு - புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடலை அடைய வாய்ப்புள்ளது. இது தொடர்ந்து 48 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு - புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகரும்.
இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 26 மீனவ கிராம மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்கள் படகுகளை மேடான பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் பழையார், தொடுவாய், திருமுல்லைவாசல், பூம்புகார், வாணகிரி, தரங்கம்பாடி பகுதிகளுக்கு சென்ற மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு மற்றும் காவல் நிலைய போலீசார் வங்கக்கடலில் மாண்டஸ் புயல் உருவாகியுள்ள காரணத்தினால் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரையில் மீனவ கிராமங்களை சேர்ந்த விசைபடகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்கவோ, கடலில் தங்கி மீன்பிடிக்கவோ வேண்டாம் எனவும், மேலும் தங்கள் படகுகளையும், உடமைகளையும் பத்திரமாக வைத்துகொள்ளுமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் புயலால் மற்றும் கனமழையால் ஏற்படும் பாதிப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு குழு உதவி ஆய்வாளர் பிரமோத் குமார் தலைமையில் 25 பேர் கொண்ட குழுவினர் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சீர்காழி அருகே உள்ள வாணகிரி மீனவ கிராமத்தில் முகாமிட்டு உள்ளனர். பைபர் படகு, மரம் வெட்டும் இயந்திரம், கயிறு, அரிவாள், கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பாதிப்புகளை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளனர்.
Cyclone Mandous: புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் மாண்டஸ் புயல்...வானிலை மையம் தகவல்