தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கிளாமங்கலத்தில் நடந்த தீண்டாமை பிரச்னையை கண்டித்து வரும் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் வாசுகி தெரிவித்தார்.


இதுகுறித்து தஞ்சாவூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் இன்னும் பல கிராமங்களில் சட்டத்துக்கு முரணாக ஜாதிய பாகுபாடு, தீண்டாமை கொடுமைகள் நிகழ்கின்றன. இது, சமூக நீதி பாரம்பரியமிக்க தமிழகத்திலும் பல்வேறு கிராமங்களிலும் தொடர்வது அவலமான விஷயம்.


கிளாமங்கலத்தில் இரட்டை குவளை முறை, முடித்திருத்த மறுப்பது போன்ற பிரச்னைகள் தொடர்பாக அப்பகுதி மக்கள் புகார் கொடுத்துள்ளனர். இதனால், கோபித்துக் கொண்டு மளிகைக் கடையில் அவர்களுக்கு பொருள்கள் இல்லை என பிற ஜாதியைச் சேர்ந்த ஆதிக்க சக்திகள் முடிவு செய்துள்ளன. இதனால் இப்பிரச்னை பெரிதாக வெடித்துள்ளது.


இது தொடர்பாக ஒரு முறை சமாதான பேச்சுவார்த்த நடைபெற்றது. இதில் தீண்டாமை கொடுமையே இல்லை என வெளிப்படையாக நிகழ்ந்த குற்றத்தை மறுத்துள்ளனர். இந்த புகார் வந்த பிறகு அலுவலர்கள் கிளாமங்கலம் கிராமத்துக்குச் சென்று, தீண்டாமை கொடுமை நிலவுகிறது என்பதை ஆய்வு செய்து அறிந்தனர். இதன் பிறகுதான் சமாதான பேச்சுவார்த்தையே நடத்துகின்றனர். இக்கூட்டம் முடிவுக்கு வராததால், மீண்டும் நாளை செவ்வாய்க்கிழமை சமாதான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இக்கூட்டத்திலாவது சுமூகமான தீர்வு காணப்பட வேண்டும்.


சட்டத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இதற்கு காரணமாக இருக்கக்கூடிய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கிராம மக்களே முன் வந்து இப்பிரச்னைகள் இருக்கிறது என வெளியே சொல்லி, பெரிய அளவுக்கு போன பிறகுதான் மாவட்ட மற்றும் வட்ட நிர்வாகங்கள் தலையிடுகின்றன. அதுவரை மாவட்ட, வட்ட நிர்வாகங்கள், தீண்டாமை ஒழிப்பு காவல் பிரிவினருக்கு தெரியவில்லை என்பது ஏற்றுக் கொள்ள முடியாது. இவர்கள் எல்லாம் எதுக்காக இருக்கின்றனர் என்ற கேள்வி எழுகிறது.


எனவே, தாமாக முன் வந்து ஜாதிய பாகுபாடு, தீண்டாமை கொடுமைகளைக் களைவதற்கு மாவட்ட நிர்வாகமும், தீண்டாமை ஒழிப்பு காவல் பிரிவும் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும். இப்பிரச்னையையொட்டி, ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்டோர் காவல் துறையினரின் அனுமதியின்றி அப்பகுதிக்குச் சென்று கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் முழக்கங்கள் எழுப்பினர். இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.


இச்சம்பவத்தில் முடித் திருத்துபவரை மட்டுமே கைது செய்துள்ளனர். இதேபோல, இச்சம்பவத்துக்கு பின்புலமாக இருந்து வற்புறுத்தியவர்களையும் போலீசார் கைது செய்ய வேண்டும். இதையொட்டி, ஒரத்தநாடு வட்ட அலுவலகம் முன்பு புதன்கிழமை (டிச.7) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.


எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டம் தொடர்பான மாநில, மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை முறையாக அமல்படுத்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


கட்சி மாவட்டச் செயலர் சின்னை. பாண்டியன், செயற்குழு உறுப்பினர் ஆர். மனோகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக, அவர் கிளாமங்கலத்தில் பாதிக்கப்பட்ட தலித் மக்களைச் சந்தித்து விசாரித்தார்.