மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான 135 வணிகவளாக கடைகள் உள்ளது. இதில் புதிய, பழைய இரண்டு பேருந்து நிலைய பகுதியிலும் 86 கடைகளில் பல மாதங்களாக ஒவ்வொரு கடைக்கும் பல ஆண்டுகளாக சுமார் ஒரு லட்சத்திற்கு மேல் வாடகை செலுத்தாமல் நிலுவையில் இருந்து வருகிறது. 




இந்நிலையில் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் நான்கு முறை இது தொடர்பாக கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது,  இருந்த போதிலும் இதுவரை நிலுவை வாடகை  தொகை செலுத்தப்படாததால் இருந்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து நகராட்சி மேலாளர் காதர்கான் தலைமையில் சீர்காழி காவல்துறையினர், நகராட்சி அலுவலர்கள் அதிரடியாக பல லட்சம் ரூபாய் வாடகை பாக்கி நிலுவையில் வைத்துள்ள புதிய பேருந்து நிலையம் வளாகத்தில் மூன்று கடைகளுக்கும், பழைய பேருந்து நிலையம் பகுதியில் நான்கு கடைகளுக்கும்,  கடைகளுக்கு முதற்கட்டமாக பூட்டி சீல் வைத்துள்ளனர்.




கடைக்கு சீல் வைப்பதற்கு எதிர்ப்பு நிலவும் என்பதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். புதிய பேருந்து நிலையம் பகுதியில் கடைகளுக்கு நகராட்சி நிர்வாகத்தினர் சீல் வைக்கும் போது கடை நடத்தி வருபவர்களுக்கும், நகராட்சி நிர்வாகத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு எழுந்தது. ஆனால் நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக 7 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். இந்த சம்பவம் மற்ற வாடகை பாக்கியுள்ள கடைதாரர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




மேலும் இது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், பல ஆண்டுகளாக வாடகை பாக்கி வைத்துள்ளார்கள் என்றால் இது வரை நகராட்சி நிர்வாகம் என்னசெய்தது என்றும்? தற்போதாவது விழித்துக் கொண்டு, நடவடிக்கையில் இறங்கி உள்ளது பாராட்டுதலுக்கு உரியது என்றும், இதனை தொடர்ந்து செயல்படுத்தி அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




மயிலாடுதுறையில் குடியிருப்புகளுக்கு மத்தியில் சாலை போக்குவரத்து பூங்கா அமைக்க குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு.


மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு கணபதி நகர் என்ற புதிய நகர் ஏற்படுத்தப்பட்டு, தற்போது அங்கு குடியிருப்புகள் உள்ளது. இந்த நகருக்காக ஒதுக்கப்பட்ட பூங்கா வளாகத்தில் கூட்டுறவு சங்கக் கட்டடமும் இயங்கி வந்தது. தற்போது, அந்த கூட்டுறவு சங்கக் கட்டடத்தை இடித்துவிட்டு, அந்த இடம் மற்றும் விளையாட்டு பூங்கா அமைந்துள்ள இடத்தில் சாலை போக்குவரத்து பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்த நிலையில், கூட்டுறவு சங்க கட்டடம் இடம் மாற்றப்படாமல் அங்கேயே இருந்ததால் நேற்று நகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் கொண்டு மாயூரம் கூட்டுறவு கட்டிட சங்கத்தில் இருந்த ஆவணங்கள், பீரோ, நாற்காலி உள்ளிட்ட பொருள்களை சாலையோரம் போட்டுவிட்டு கட்டடத்தை இடித்து தரைமட்டமாகிவிட்டு சென்றனர். 




இதையடுத்து, அச்சங்கத்தின் செயலாளர் ரமேஷ் ஆவணங்கள் மற்றும் பீரோக்களை அருகில் உள்ள வீடுகளில் பாதுகாப்பாக கொண்டுபோய் வைத்துள்ளார். அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கூட்டுறவு கட்டட சங்கத்திற்கு மாற்று இடம் தேர்வு செய்யப்படாத நிலையில், ஆவணங்களை வெளியில் போட்டுவிட்டு நகராட்சி ஊழியர்கள் கட்டடத்தை இடித்து தரைமட்டமாக்கிய சம்பவம் அப்பகுதி குடியிருப்புவாசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணபதி நகர் பூங்காவை, சாலை போக்குவரத்து பூங்கா அமைக்க நகராட்சியும், மாவட்ட நிர்வாகமும் முயற்சிக்கக்கூடாது. அங்கு குடியிருப்புவாசிகள் பயன்படுத்தும் வகையில் பூங்காவை மேம்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.