தஞ்சையில் சூப்பர் மார்க்கெட் மேற்கூரையை பிரித்து பணம் மற்றும் பொருட்களை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை துவாரகா நகரை சேர்ந்தவர் கமேஷ் (22). இவர் தஞ்சை புதிய ஸ்டாண்ட் அருகே ஆர்.ஆர். நகரில் சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வருகிறார். வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு சூப்பர் மார்க்கெட்டை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலையில் வந்து சூப்பர் மார்க்கெட்டை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, மேற்கூரை பிரிக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டு இருந்தது. மேலும் சூப்பர் மார்க்கெட்டில் இருந்த ரூ.15 ஆயிரம் மதிப்பிலான பொருட்களும் திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீசில் கமேஷ் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் மற்றும் பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.





இருவேறு இடங்களில் பைக்குகள் திருட்டு

தஞ்சையில் வெவ்வேறு இடங்களில் 2 பைக்குகள் திருடப்பட்டது குறித்து மருத்துவக்கல்லூரி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை மங்களபுரம் பகுதியை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி (72). ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு. சம்பவத்தன்று இவர் தன்னுடைய பைக்கை வீட்டின் அருகில் நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் பைக் கிடைக்கவில்லை.

இதுகுறித்து புண்ணியமூர்த்தி தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்தழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 
இதேபோல் தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்த கார்த்திக் (19)  என்பவர் தனது நண்பர்களுடன் நெய்வாய்க்கால் பகுதிக்கு தனது பைக்கில் சென்றார். பின்னர் குளித்து விட்டு திரும்பிய போது பைக்கை காணாமல் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கார்த்திக், தஞ்சை தாலுகா போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.