தஞ்சாவூர்: புகையில்லாத போகியை கொண்டாட மாநகராட்சி எடுத்த நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனுக்கு பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினர் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளனர்.
தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் கண்ணன், மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தலைமை வகித்து முதல் கட்டமாக188 பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகளை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-
தஞ்சை மாநகரில் புகையில்லா போகி-மாசற்ற போகி என்பதை வலியுறுத்தும் விதமாக 51 வார்டுகளிலும் தலா ஒரு குப்பை சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி பள்ளியக்ரஹாரம் நடுத்தெரு, பூக்குளம் தெற்குதெரு, செல்லியம்மன் கோவில் தெரு, அரிக்காரதெரு, கிருஷ்ணன் கோவில் தெரு, கங்காநகர், ஏ.ஒய்.ஏ. நாடார் ரோடு, வடக்குஅலங்கம், பொன்னிநகர், திரவுபதிஅம்மன்கோவில் தெரு, டபீர்குளம்ரோடு, ஒட்டக்காரத்தெரு, கொண்டிராஜபாளையம், அழகிகுளம், டெசிடென்சி பங்களா ரோடு, பட்டுநூல் கீழராஜவீதி, ராஜூவ்நகர், வண்டிக்காரதெரு, விளார்ரோடு மீன்மார்க்கெட், சித்ராநகர் 1-ம்தெரு, ராஜராஜன்நகர் 4-ம் தெரு, டி.பி.எஸ்நகர், ராம்நகர், எல்.ஐ.சி. காலனி, ராம்நகர், லட்சுமிபுரம், ஸ்ரீநகர் கூட்டுறவு காலனி பூங்கா, புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்பட 51 இடங்களில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.
போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்கள், துணிகள் எரிப்பதை தடுத்து, சேகரிக்கும் விதமாக இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் தலா 2 தூய்மை பணியாளர்கள் இருப்பார்கள். பழைய பொருட்கள், துணிகளை சாலையோரம், பொது இடங்களில் எரிக்காமல் இந்த மையத்தில் பொதுமக்கள் கொடுத்தால் போதும். புகையில்லாத போகியை கொண்டாடி சுற்றுப்புறத் தூய்மையை பாதுகாக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இதேபோல் தஞ்சை மாநகராட்சி பகுதியில் 2,614 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த பணிக்கு ரூ.31 லட்சத்து 18 ஆயிரத்து 350 செலவு செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்தை தடுக்க கருத்தடை செய்யப்பட்ட தெரு நாய்களின் கழுத்தில் ஒளிரும் கழுத்துப்பட்டை பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாநகராட்சியின் இந்த ஏற்பாடு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இவ்வாறு செய்யப்பட்ட ஏற்பாட்டால் புகையில்லாத போகியை கொண்டாடும் நிலையை ஏற்படுத்திய மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனுக்கு பாராட்டும், வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.