தஞ்சாவூர்: சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு சப்ளை செய்யும் விவசாயிகளுக்கு வெட்டுக் கூலியை அரசே ஏற்க வேண்டும். நெல்கொள்முதல் நிலையங்களில் களம் அமைக்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் விவசாயிகள் பேசியதாவது:
தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ் - தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு சப்ளை செய்யும் விவசாயிகளுக்கு வெட்டு கூலியை அரசே ஏற்க வேண்டும். அண்ணா குருங்குளம் சர்க்கரை ஆலைக்கு எத்தனால் உற்பத்தி தொடங்க ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலங்களில் பெய்கின்ற மழைநீர் வீணாவதை தடுக்க மாவட்டத்தில் உள்ள காட்டு வாரி பகுதியில் கசிவுநீர் குட்டை அமைக்க வேண்டும்.
பெரமூர் அறிவழகன் : மின்சார வாரியம் மூலம் வசூலிக்கப்படும் தட்கல் முறை மின் இணைப்பு திட்டத்தில் எத்தனை இணைப்பு எப்போது வழங்க முடியும் என்பதை உறுதி செய்ய வேண்டும் . கூட்டுறவு சங்கங்களின் மின்னணு பரிவர்த்தனை செய்திட வேண்டும். பெரமூர் கிராமத்தில் இயங்கும் நெல் கொள்முதல் நிலையத்தில் களம் மற்றும் கொட்டகை அமைக்க வேண்டும். மின்மோட்டார் ஒயர்கள் திருடு போவதை தடுத்திட பெரமூர் பஞ்சாயத்து முழுவதும் கண்காணிப்பு கேமரா அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜீவகுமார் - பருவம் தவறிய மழையினால் சாகுபடி தாமதமானது.இப்போது தான் இரண்டாம் களை எடுப்பு நடக்கிறது.பூதலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் தேவை. மேட்டூர் அணை மூடப்படும் தேதியை ஜனவரி 28 க்குப்பிறகு கால நீடிப்புச்செய்ய வேண்டும். அரசு வழங்க உத்தேசித்துள்ள 2024,2025 க்கான பயிர் பாதிப்பு நிவாரணம் வெளிப்படையாகவும் விடுபடுதலின்றியும் இருக்க வேண்டும்.கல்விக்கடன் உள்ளிட்ட பாக்கிக்காக அதனை பிடித்தம் செய்யக்கூடாது. கூட்டுறவு வங்கிகளில் இளம் உழவர்களுக்கு கடன் வழங்குவதில்லை. உறுப்பினர்களின் சராசரி வயது 53 ஆகும்.விவசாயத்தை இளமைப்படுத்த வேண்டும். இயற்கை வேளாண்மைக்கு கூடுதல் கவனம் தேவை.கால்நடை எரு தேவை எனுமிடத்தில் கால்நடைச்செல்வங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். ராயமுண்டான்பட்டி கால்நடை மருத்துவமனையை திரும்ப இயக்க வேண்டும்
ஏகேஆர். ரவிச்சந்தர் : கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவ மழையால் நெற்ப்பயிர்கள் பாதிப்படைந்தது..இதற்கு நிவாரணம் அறிவித்துள்ள நிலையில் தஞ்சை மாவட்டத்தில் எத்தனை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்பதை வருவாய் கிராம வாரியாக பட்டியலை வெளியிட வேண்டும். தொடர் கன மழையால் பாதிப்படைந்த சம்பா தாளடி நெற்பயிர்களுக்கு தேவையான ஜிப்சம், சிங் சல்பேட் ஆகியவற்றை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் செங்கரும்பிற்கு இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும்.மேலும் செங்கரும்பிற்கான கொள்முதல் விலையை ரூ.50 என நிர்ணயித்து கொள்முதல் செய்ய வேண்டும்.
பாபநாசம் முகமது இப்ராஹிம் : பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்க உத்தரவிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கம் செய்தது, நிதி குறைத்தது ஆகிய செயல்பாடுகளை கண்டிக்கிறோம். நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். மணிமண்டபம் கட்ட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாபநாசத்தில் நவீன நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். பொங்கல் தொகுப்பில் தேங்காய் எண்ணெய், வெல்லம், கரும்பு போன்றவற்றுடன் ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும்.
கங்கை சமுத்திரம் சுந்தர வடிவேலு : பூதலூர் கல்லணை கால்வாய் ஆறு மேட்டு குமுளிகளான நாச்சியார்பட்டி மோளக்குடி, வைரப்பெருமாள் பட்டி, கங்கை சமுத்திரம் பகுதிகளில் விவசாயிகள் தண்ணீர் கிடைக்காமல் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் சாகுபடி பயிர்கள் காய்ந்து வருகிறது. கல்லணை கால்வாயில் ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்படுவதால் இப்பகுதி விவசாயிகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. இது குறித்து நிரந்தர தீர்வு காண வேண்டும். 2200 கன அடி திறக்கப்பட்டால் தான் இப்பகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கும்.
அம்மாபேட்டை செந்தில்குமார் : மத்திய அரசு விதை வரைவு மசோதாவை திரும்ப பெற வேண்டும். குறுவை அறுவடையின் போது கொள்முதல் செய்வதில் ஏற்பட்ட பாதிப்புகள் சம்பா சாகுபடியில் ஏற்படாதவாறு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் அறுவடை சோதனை வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும். பயிர் இழப்பீடு செயலியில் பல பாதிப்புகள் உள்ளது இதை சீரமைக்க வேண்டும். என்னை வித்துக்கள் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
ஒரத்தூர் பிரகலாதன்: ஆற்காட்டு மயான சாலையில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். வெண்ணாறு பிரிவு கச்சமங்கலம் தலைப்பு பிள்ளை வாய்க்கால் பாசனம் ஒரத்தூர் நத்தமங்கலம், மேகளத்தூர் ஆகிய ஊர்களுக்கு சாகுபடிக்கு உதவுகிறது. பாசன காலங்களில் மழை நேரத்தில் தண்ணீர் அதிகமாக வரும்போது வண்ணாத்தி வாய்க்காலில் உள்ள வலம்புரி வாய்க்காலில் தண்ணீர் சேர்கிறது. ஆனால் அது வடிவதற்கு வாய்ப்பு இல்லை. இதனால் வயல்களில் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்படுகிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெள்ளாம்பெரம்பூர் ரமேஷ் : கல்லணை கட்டுவதற்கு முன்பே 250 ஆண்டுகளுக்கு முன்பு கச்சமங்கலம் இடத்தில் கட்டப்பட்ட அணைக்கட்டு பகுதி சுற்றுச்சுவர் பழுதடைந்துள்ளது. இதை கூடுதல் நிதி ஒதுக்கி கோடை காலத்தில் சீரமைத்து தர வேண்டும். வெண்ணாறு பிரிவு இரட்டை வாய்க்காலின் தலை மதகுப்பகுதி அமைந்துள்ள பிரமன்பேட்டை கிராமம் அருகே வெண்ணாறு இடது கரை ஓரம் கருவேல மரங்கள் காட்டாமணக்குச் செடிகள் மண்டி கிடக்கிறது. இதனால் வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் வருவது தடைபடுகிறது. இதை உடன் சீரமைத்து தர வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சாரத் திருத்தச் சட்டம், விதை திருத்த சட்டம் ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும்.
பட்டுக்கோட்டை வீரசேனன் : பட்டுக்கோட்டை பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட தென்னை வணிக வளாகத்தால் விவசாயிகளுக்கு எவ்வித பயனும் இல்லை. இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு விவசாயிகள் பேசினர்.