தஞ்சாவூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து தஞ்சாவூருக்கு 2600 டன் கோதுமை, கர்நாடகாவில் இருந்து 1300 டன் சர்க்கரை சரக்கு ரயிலில் வந்து சேர்ந்துள்ளது. 

Continues below advertisement

தமிழகத்தில் பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு புழுங்கல்அரிசி, பச்சரிசி, கோதுமை,  சர்க்கரை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை,  சர்க்கரை போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருந்து சரக்கு ரயிலில் 42 வேகன்களில் 2600 டன் கோதுமை, கர்நாடக மாநிலத்திலிருந்து 21 வேகன்களில் 1300 டன்  சர்க்கரை ஆகியவை தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சர்க்கரை மற்றும் கோதுமை  மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்பட்டன.

Continues below advertisement

இந்த சர்க்கரை மற்றும் கோதுமை மூட்டைகள் டெல்டா மாவட்டங்களில் பொதுவினியோகத்திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

சரக்கு ரயிலில் 1300 டன் உரம் வந்தது

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர கோடை கால சாகுபடியும் நடைபெறும். இந்த ஆண்டு குறிப்பிட்ட தேதியான ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறந்து விடப்பட்டது.

தற்போது தஞ்சை மாவட்டத்தில் சம்பா , தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நெற்பயிர்களுக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் இடுபொருட்கள் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரெயிலில் 1300 டன் யூரியா, டிஏபி, பொட்டாஷ் உரங்கள் தஞ்சைக்கு வந்து இறங்கியது. பின்னர் உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு கூட்டுறவு சொசைட்டி மற்றும் தனியார் விற்பனை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.