தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் ஜனவரி 21 ஆம் தேதி முதல் கள்ளை இறக்கி  விற்கும் போராட்டம் நடத்தப்படும் என  தமிழ்நாடு  கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  தமிழ்நாட்டின் அடையாளமாகவும், மென் பானமாகவும் இருப்பது கள். கள் இறக்குவதும், பருகுவதும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்குக் கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை. உலக அளவில் தமிழ்நாட்டைத் தவிர எந்தவொரு நாட்டிலும் கள் இறக்கவும், பருகவும் தடை இல்லை. கள் ஆலகால விஷமும் இல்லை. அதே நேரத்தில் இறக்குமதி மதுக்களும், இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானங்களும் நல்லதல்ல. கள்ளையும், சீமைச் சாராயத்தையும் ஒன்றெனக் கருதி  33 ஆண்டுகளுக்கு முன்பு விதித்த தடை உள்நோக்கம் கொண்டது.




மதுவிலக்கு அமல்படுத்த வேண்டி மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஸ்ரீமன் நாராயணன் கமிட்டி, நீதியரசர் டேக்சந்த் கமிட்டி, கேரள அரசால் நியமிக்கப்பட்ட ஏ.பி. உதயபானு கமிட்டி, குஜராத் அரசால் நியமிக்கப்பட்ட என்.எம். மியாபோயி கமிட்டி என எந்தவொரு கமிட்டியும் கள்ளுக்குத் தடை விதிக்கச் சொல்லி அரசுக்குப் பரிந்துரை செய்யவில்லை. பனை, தென்னை, ஈச்ச மரங்கள் இருந்தால், அவற்றிலிருந்து நீராகவோ, பதனீராகவோ, கள்ளாகவோ இறக்கியும், குடித்தும், விற்றும் கொள்ளலாம். மதிப்புக் கூட்டப்பட்ட பண்டங்களாக மாற்றி உள் நாட்டிலும், உலக அளவிலும் சந்தைப்படுத்தலாம். இதன் மூலம், மூன்றாவது இடத்தில் உள்ள தமிழகத்தை முதலிடத்தில் நிலை நிறுத்தும்.




தமிழ் மக்களின் உணவின் ஒரு பகுதியாகக் கள்ளும், பழைய சோறும் இருந்த வரை புற்றுநோய்  உள்பட தொற்று நோய்களின் எண்ணிக்கை கட்டுக்குள் இருந்தது. இந்த இரண்டும் இல்லாததால் தற்போது நோய்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவிட்டது. உணவின் ஒரு பகுதியாகக் கள்ளையும், பழைய சோறையும் மீண்டும் நடைமுறைப்படுத்தினால், நோய்களின் எண்ணிக்கை குறையும். மருத்துவர்களின் எண்ணிக்கையும் குறைந்து, மருத்துவப் படிப்பில் சேரக்கூடிய மோகமும் குறைந்துவிடும்.





கள் ஒரு போதைப் பொருள் அல்ல என்பதை இப்போதைய முதல்வர் நன்கு அறிந்தவர். எனவே, நாளை தொடங்கப்படவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் முதல் நாள் ஆளுநர் உரையில் கள்ளுக்குத் தடை நீக்கம் பற்றிய அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இதை அரசியல் சாசனச் சட்டத்தின்படி ஏற்றுச் செயல்படுத்துவர் என நம்புகிறோம். இது, பொய்த்துப் போனால் திட்டமிட்டபடி, தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் ஜனவரி 21 ஆம் தேதி முதல் கள்ளை இறக்கி விற்கும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.