தஞ்சாவூர்: குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியைச் சேர்ந்த வாலிபரின் உடல் சொந்த கிராமத்திற்கு நேற்று நள்ளிரவு கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் சென்று வாலிபரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அரசு அறிவித்த நிவாரணத் தொகையை அவரது குடும்பத்தினருக்கு வழங்கினார். 


சொந்த கிராமத்திற்கு வந்த வாலிபரின் உடல்


குவைத் நாட்டில் மங்காஃப் என்ற இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த, தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஆதனூர் பகுதியை சேர்ந்த ரூனாஃப் ரிச்சர்ட் ராய் என்பவருடைய உடல் குவைத் நாட்டில் இருந்து விமான மூலம் கொண்டு கேரளா மாநிலம் கொச்சிக்கு கொண்டு வரப்பட்டது. 




பின்னர் கொச்சியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த கிராமத்திற்கு நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் கொண்டு வரப்பட்டது. அவரது உடலைக் கண்டு பெற்றோர்கள், உறவினர்கள், கிராமத்தினர் கதறி அழுதது பார்ப்பவர்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது. 


நேரில் அஞ்சலி செலுத்திய மாவட்ட ஆட்சியர்:


இதற்கிடையில் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆதனூருக்கு நேரில் வந்தார். தொடர்ந்து புனாஃப் ரிச்சர்ட் ராய் உடலுக்கு அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ, வட்டாட்சியர் தெய்வானை ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். பின்னர்  புனாஃப் ரிச்சர்ட் ராய் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிவாரணத் தொகை ரூ.5 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வழங்கி ஆறுதல் கூறினார். 


கல்லறைத் தோட்டத்தில் உடல் நல்லடக்கம்:


அதைத் தொடர்ந்து புனாஃப் ரிச்சர்ட் ராய் உடல் அவரது வீட்டில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு புனித அன்னாள் ஆலயத்தில் வைக்கப்பட்டு, சிறப்பு பிரார்த்தனை மற்றும் இறுதி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் ஆர்.சி கல்லறை தோட்டத்தில் உடல் நல்லடக்கம் நடைபெற்றது. இதில் பேராவூரணி மற்றும் ஆதனூரை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு புனாஃப் ரிச்சர்ட் ராய் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.