தஞ்சாவூர்: தஞ்சை மார்க்கெட்டிற்கு வாழைக்காய் வரத்து குறைந்தது. இதனால் விலை கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. தற்போது வாழைக்காய் தார் ரூ. 800க்கு விற்பனை செய்யப்படுகிறது.


வாழைக்காய் பயன்பாடு அதிகம்


வாழைக்காயை உண்பதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். வாழைக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. மேலும் பெருங்குடல் புற்று நோய் வராமல் கவசமாய் செயல்படுகிறது. வாழைக்காய் வைட்டமின், கால்சியம், மெக்னீசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 


வாழைக்காயில் ஸ்டார்ச் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் போன்றவை அதிகமாக உள்ளது. இந்த ஸ்டார்சானது கரையாத நார்ச்சத்தாக செயல் பட்டு, நேரடியாக ஜீரண மண்டலத்தை சென்றடைகிறது. அங்கே உள்ள நச்சுக்களை வெளியேற்றி அதன் மூலம் வரும் நோய்களிலிருந்து காப்பாற்றுகிறது.


வாழைக்காயில் உப்புச்சத்து குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கும். வாழைக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. வாழைக்காய்களில் அதிக அளவு இரும்புச்சத்து, மற்றும் மாவுச்சத்தும் உள்ளது. தமிழகத்தில் வாழைக்காய் பயன்பாடு அதிகம் உள்ளது. தஞ்சைக்கு வரும் வாழைக்காயும் அதிகம்தான். 




300க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன


தஞ்சை அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 300க்கு மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் உள்ளன. தஞ்சை மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் திருவையாறு, நிலக்கோட்டை, தேனி போன்ற பல பகுதிகளில் இருந்து வாழைக்காய் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இதேபோல் தஞ்சையில் இருந்து வெளியூர்களுக்கும் விற்பனைக்காக வாழைக்காய் அனுப்பி வைக்கப்படுகிறது.


தஞ்சை மார்க்கெட்டிற்கு வரத்து குறைந்தது


இதற்கிடையில் தஞ்சை காமராஜர் காய்கறி மார்க்கெட்டுக்கு வாழைக்காயின் வரத்து குறைந்ததால் வாழைத்தார் விலை தொடர்ந்து கிடுகிடுவென்று உயர்ந்து கொண்டே இருக்கிறது. பொதுவாக தஞ்சை காமராஜர் மார்க்கெட்டுக்கு அதிகளவிலான வாழைத்தார் விற்பனைக்காக கொண்டு வரப்படும். ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழையால் வாழை மரங்கள் சேதம் அடைந்ததால் விளைச்சல் பாதிக்கப்பட்டது.


கிடுகிடு விலை உயர்வு


தற்போது வரத்து குறைந்துள்ளதால் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு தார் மொந்தன் வாழைக்காய் ரூ.450க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது அதன் விலை உயர்ந்து ரூ.800க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் கடைகளுக்கு பஜ்ஜி போட வாங்கும் வியாபாரிகள் மற்றும் சமையலுக்கு வாழைக்காய் வாங்கும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


வாழைக்காய் வியாபாரிகள் கருத்து


இதுகுறித்து வாழைக்காய் வியாபாரிகள் தரப்பில் கூறுகையில்,  தஞ்சைக்கு வாழைக்காயின் வரத்து குறைந்துள்ளது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழையினாலும் விளைச்சல் பாதிக்கப்பட்டு அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வாழைக்காயின் விலையும் உயர வாய்ப்பு உள்ளதால், கடைகளில் பஜ்ஜி போட வாங்கும் வியாபாரிகளும் வாழைக்காய் தார் வாங்காமல் ஒரு சீப்பு என்ற அடிப்படையில் குறைவாக வாங்கி செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.