தஞ்சாவூரில்

  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல்ரஹ்மான் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், வக்பு வாரியம் கண்காணிக்கக்கூடிய பல்வேறு சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்டு எடுக்கக்கூடிய பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன. கோயில் சொத்துகள் எல்லாம் அந்தந்த கோயில் பெயரில் உள்ளன. ஆனால், வக்பு சொத்துகள் வக்பு வாரியம் பெயரில் கிடையாது. சொத்துகளுக்கான உரிமை அந்தந்த மசூதிகள், தர்காக்களின் நிர்வாகத்துக்குரியது.


கண்காணிப்பாளராக இருக்கக்கூடிய வக்பு வாரியம் ஆக்கிரமிப்பை அகற்றும் நடவடிக்கைகளில் அந்தந்த மசூதி நிர்வாகம் ஈடுபடக்கூடிய பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு தரும். எனவே மீட்டெடுக்க வேண்டிய கடமை என்பது அந்தந்த மசூதிகள், தர்கா நிர்வாகிகளுக்கு மிக முக்கியமான ஒன்று. அந்த நடவடிக்கைகளுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பும், ஒத்துழைப்பும் வக்பு வாரியம் தரும்.ஏற்கெனவே அதற்கான முயற்சியில் மசூதி, தர்கா நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். ஆக்கிரமிப்பைக் கண்டு கொள்ளாமல் இருப்பவர்களுக்குத் தகுந்த அறிக்கைகள் அனுப்பப்பட்டு, பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அனைத்து சொத்துகளையும் பூஜ்ஜிய மதிப்பு செய்வதற்கு அரசிடம் நாங்கள் அனுமதி பெற்றிருக்கிறோம். பூஜ்ஜிய மதிப்பாகிவிட்டால் யாருக்கும் விற்கவோ, யாரிடம் இருந்து வாங்கவோ முடியாத நிலை ஏற்படும்.




போலி பட்டாக்கள், போலி ஆவணங்கள் மூலம் விற்கப்பட்ட நிலங்களை மீட்டெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. மிக விரைவில் ஒரு கணிசமான அளவிலான சொத்துகள் மீட்டெடுக்கப்படும். வக்பு வாரிய சொத்துகள் எல்லாவற்றையும் தலைமை பதிவுத்துறை அலுவலர்களிடம் கொடுத்து கணினியில் ஏற்றப்பட்டு, இனிமேல் அச்சொத்துக்களை யாரும் விற்கவோ, வாங்கவோ முடியாது என்கிற அளவுக்கு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி வருகிறோம். போலி பட்டாக்கள், போலி ஆவணங்கள் மூலம் சொத்துக்களை வாங்கியவர்கள் இனிமேல் எந்தக் காலத்திலும் விற்க முடியாத அளவுக்கு கணினி மூலம் தடுக்கப்படும். மத்திய அரசுப் பெண்களுக்கான திருமண வயதை 18 லிருந்து 21 ஆக உயர்த்த நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் செய்ய முயல்கிறது. வழக்கம் போல மத்திய அரசு சர்வாதிகார போக்குடன், அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படை உரிமைகளை மீறக்கூடிய வகையில் இந்த முயற்சியில் ஈடுபட்டிருப்பது கண்டனத்திற்குரியது. மக்கள் நலனுக்கு விரோதமான செயலாகும்.




பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதன் மூலம் சமூக சீர்கேடுகளையும், சமூக ஒழுங்கு இழப்புகளையும் இந்த தேசம் சந்திக்கக்கூடிய அபாயம் இருக்கிறது. மிகப்பெரிய அழிவை நோக்கிய சட்டத்திருத்தம் இது. நாட்டுக்கு, தேசத்திற்கு மிகப்பெரிய கேடு விளைவிக்கக்கூடியது. தமிழகத்தில் வருகிற உள்ளாட்சி தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது என்றார். அப்போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலர் எஸ்.எம். ஜெய்னுலாப்தீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.