மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 13.5 ஏக்கர் இடம் மணக்குடியில் தேர்வு செய்யப்பட்டு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் நிலம் வாங்கப்பட்டது. தொடர்ந்து மயிலாடுதுறை நகராட்சியில் போதிய நிதி இல்லாததால் புதிய பேருந்து நிலையம் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டம் 2021 - 2022 -இன்கீழ் தமிழக அரசு 24 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்தது. அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறையில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டு, நகராட்சி அலுவலகத்தில் நகராட்சித் தலைவர் செல்வராஜ் தலைமையில் அண்மையில் அவசரக் கூட்டம் நடத்தி ஒப்புதல் பெறப்பட்டது.
இதனை அடுத்து, புதிய பேருந்து நிலையத்துக்கான பூமிபூஜை அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜகுமார், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், மயிலாடுதுறை நகராட்சி நகர மன்ற தலைவர் செல்வராஜ், நகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி முன்னிலையில், தருமபுரம் ஆதீனம் 27 -வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்துகொண்டு ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையத்திற்கான பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மக்களின் 25 ஆண்டு கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணி இன்று துவங்கியதால் இப்பகுதி பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பரிவர்த்தனைக்கூடத்தை தமிழக முதல்வர் இன்று காணொளி மூலம் திறந்து வைத்த நிலையில், மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் ரிப்பன் வெட்டி மக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தார்.
நபார்டு திட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கட்டுமானங்களை மேம்படுத்தி தரம் உயர்த்தும் திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பரிவர்த்தனை கூடம் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
இதையடுத்து இக்கட்டத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் அதனை மக்கள் பயன்பாட்டுக்காக வழங்கினார். இதில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை நாகப்பட்டினம் விற்பனைக்குழு கண்காணிப்பாளர் சங்கர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.