தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நேற்று தாறுமாறாக ஓடிய மினி பஸ் மோதியதில் சிறுவன் படுகாயமடைந்தான். 15 பைக்குகள், கார், மின் கம்பம் ஆகியவை சேதமடைந்தன. இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர் பழைய பஸ்ஸ்டாண்டிலிருந்து மருத்துவக்கல்லூரி நோக்கி தனியார் மினிபஸ் ஒன்று நேற்று மதியம் புறப்பட்டது. இந்த பஸ்சில் 20க்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்தனர். இந்த பஸ்சை வல்லம் பகுதியை சேர்ந்த டிரைவர் செந்தில் என்பவர் ஓட்டி வந்தார். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை பாலாஜி நகர் பகுதியில் சென்ற போது இந்த மினிபஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

இதனால், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஏறத்தாழ 15 பைக்குகள், ஸ்கூட்டர்கள், மின் கம்பம் மீதும், அடுத்து கார் மீதும் மோதி நின்றது. இதனால் இந்த வாகனங்கள் சேதமடைந்தன; மின் கம்பமும் சாய்ந்தது. மேலும், சாலையோரம் நின்று கொண்டிருந்த சிறுவன் ஒருவனும் பலத்த காயமடைந்தான். இவரை தவிர சிலர் லேசான காயமடைந்தனர்.




மதிய வேளை என்பதாலும் வெயில் சுட்டெரித்து கொண்டு இருந்ததாலும் மக்கள் நடமாட்டம் குறைந்து இருந்தது. மேலும் வாகனப்போக்குவரத்தும் அதிகமில்லை. இந்த பகுதியில் முக்கியமாக விபத்து நேர்ந்த பகுதியில் வாகனப் போக்குவரத்து எப்போதும் மிகுந்து காணப்படும். அதிர்ஷ்டவசமாக நேற்று போக்குவரத்து இல்லாத நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது. இல்லாவிடில் பெரிய அளவில் விபத்து நடந்து இருக்கும் என்று பொதுமக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர். தொடர்ந்து காயமடைந்தவர்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நகரப் போக்குவரத்து புலனாய்வு காவல் பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விபத்து நடந்த பகுதியில் கடைக்காரர்கள் சாலைகளில் கடைகளின் விளம்பர பலகைகளும் வைத்துள்ளனர். இதை அறிந்த தஞ்சாவூர் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ராஜசேகர் அங்கு ஆக்கிரமிப்பில் இருந்த கடைகளை அகற்றியதோடு அவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்தார்.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் காலை முதல் இரவு வரை அதிகளவு போக்குவரத்து நிறைந்து இருக்கும். மினி பஸ்கள் செல்லும் போது வெகு வேகமாகவும், ஹாரன்களை அலறவிட்டும் செல்வதால் பைக்குகளில் செல்பவர்கள் அச்சமடைந்து தடுமாறி விழுந்தும் விபத்துக்குள்ளான சம்பவங்கள் நடந்துள்ளது. இதுபோன்று வெகு வேகமாக செல்லும் மினி பஸ்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும். மேலும் இதுபோன்று பயணிகள் வாகனங்களை அதிவேகமாக இயக்கும் டிரைவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவர்களின் லைசென்சை தற்காலிகமாக தடை செய்ய வேண்டும் என்றும் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.