தஞ்சாவூர்:  தஞ்சை சூரக்கோட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை பட்டா வழங்காததை கண்டித்து தங்களது ரேஷன் கார்டு, ஆதார் அட்டை அனைத்தையும் சாலையில் வீசியெறிந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்து பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பெற்றுக் கொண்டார். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பல பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

அப்போது தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை பகுதியில் இருந்து குழந்தைகளுடன் வந்த பெண்கள் கலெக்டர் அலுவலக முகப்பில் திடீரென்று அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது அவர்கள் தெரிவித்ததாவது:

தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டை பகுதியில் நாங்கள் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். கடந்த நான்கு வருடங்களாக மாவட்ட ஆட்சியரிடம் பட்டா வழங்க கோரி பலமுறை மனு எடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எங்கள் பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை. ஒரு அவசரத்திற்கு கூட ஆம்புலன்ஸ் உள்ளே வராத நிலையில் எங்கள் பகுதி உள்ளது. மின்சாரம் சாலை குடிநீர் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை. மேலும் எங்கள் குழந்தைகள் பள்ளிக்கு சென்றால் அவர்களை துரத்துகிறார்கள். மேலும் ஜாதி பெயரை குறிப்பிட்டு பேசுகிறார்கள். தேர்தல் வரும் காலங்களில் எங்களை அடித்து ஓட்டு போட சொல்லி மிரட்டுகிறார்கள். ஓட்டு போடுவதற்கு மட்டும் தான் நாங்கள் உள்ளோமா என அப்பகுதி மக்கள் வேதனையுடன் கேள்வி எழுப்பினர்.

பட்டா குறித்து கோட்டாட்சியரிடம் கேட்டதற்கு நான் உங்கள் பகுதியில் வந்து ஆய்வு செய்து நீங்கள் ஆடு, மாடுகளை திருடுகிறீர்கள் என்று கூறுகிறார்கள் இதனால் உங்களுக்கு பட்டா வழங்க முடியாது என கூறுகிறார். எனவே பட்டா வழங்கும் வரை நாங்கள் இங்கிருந்து போக மாட்டோம் எனக்கூறி அவர்களது குழந்தைகளுடன் சேர்ந்து மாவட்ட ஆட்சியர் நுழைவாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் ஒருமையில் பேசியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் இந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. பின்பு போலீசார் அவர்களை மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து சென்றனர். மாவட்ட ஆட்சியர்  உங்களுக்கு பிள்ளையார்பட்டி பகுதியில் இடம் ஒதுக்குவதாக தெரிவித்த பின்னர் சூரக்கோட்டை பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.

இதேபோல் தனது வீட்டை சுற்றி வேலி அடைத்து பாதை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 3வது முறையாக விவசாய கூலி தொழிலாளி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது: எனது வீட்டை சுற்றி நாலு புறமும் முள்வேலி அடைத்து பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த டிசம்பர் மாதம் மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் கடந்த 2 வாரத்திற்கு முன்பும் மனு அளித்தேன். இதுவரை 76 நாட்கள் சென்ற நிலையில் இன்றும் பாதை ஆக்கிரமிப்பு  அகற்றப்படாததால் எங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத சூழல் உள்ளது.

மேலும் நாங்களும் வேலைக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகிறோம். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.