தீபாவளி பண்டிகை வரும் 4ஆம் தேதி வியாழக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடுவதை முன்னிட்டு, தஞ்சாவூர், கும்பகோணத்தில் குவிந்த பொதுமக்களால், பிரதான வணிக நிறுவனங்கள் நிறைந்த சாலைகள்  திணறியது. கிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க, தீபாவளி மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகின்றது. இராமாயண  இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப்படுவதாக கருதப்படுகிறது.




இந்நிலையில் வரும் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில், தஞ்சை மாவட்டத்திலுள்ள  பட்டுக்கோட்டை, பேராவூரணி, கல்லணை, திருக்காட்டுப்பள்ளி,திருவையாறு, ஒரத்தநாடு உள்ளிட்ட தெற்கு தஞ்சை மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதி மக்களும் நேற்று தஞ்சாவூர் மாநகரப்பகுதிகளுக்கும், இதே போல் அரியலுார், பெரம்பலுார், திருவாரூர், நாகை, கடலுார் மாவட்டத்தை சேர்ந்த பொது மக்கள், புதுமணத்தம்பிகளுக்கு சீர் கொடுக்கவும், புத்தாடைகள் மற்றும் பொருட்களை வாங்குவதற்காக குடும்பத்துடன் கும்பகோணத்தில் குவிந்தனர்.


இதனால் தஞ்சாவூர் மாநகரப்பகுதிகளிலுள்ள காந்திஜி ரோடு, ரயில்வே ஸ்டேசன் சாலை, பாபாசாகிப்மூலை, கிழராஜவீதி, தெற்கு வீதி, தென்கலங்கம், பழைய பேருந்து நிலையம், ஆப்ரகாம்பண்டிதர் சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பொது மக்கள் குடும்பத்துடன் கூட்டமாக வந்தனர். இதே போல் கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் வடக்கு வீதி, தெற்கு வீதி, சோமேஸ்வரர் கோயில் தெற்கு வீதி, பெரிய கடைத்தெரு, மடத்துத்தெரு, உச்சிபிள்ளையார்கோயில் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் பொது மக்கள் பொருட்களை வாங்க குவிந்ததனர். இதனால் தஞ்சை, கும்பகோணத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.




வட கிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால், இதனை பொருட்படுத்தாது, பொது மக்கள் குடும்பத்துடன் குடைகளை பிடித்தபடி ஆர்வமுடன், தங்களுக்கு தேவையான புத்தாடைகள், பட்டாசுகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி சென்றனர்.




பண்டிகையை முன்னிட்டு தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. அசம்பாவிதங்கள் ஏற்படாமலிருக்கும் வகையில், சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கும் பணியும், போலீசாரை கொண்டு,, பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும் வகையில், ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. மேலும், தனிப்படை மற்றும் குற்ற தடுப்பு பிரிவு போலீசார், மாற்று உடையில் கூட்டநெரிசலான பகுதிகளில், திருடர்கள் உலாவுகின்றனரா என தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் கூட்டம் மாலை நேரத்தில் அதிகமானதால், தஞ்சாவூர்,கும்பகோணம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும்  போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.