தஞ்சாவூர்: தஞ்சை அருகே வல்லம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் தனித்திறமைகளால் சான்றிதழ், கோப்பைகள், விருதுகள் பெற்று அசத்துகின்றனர்.


லட்சியத்தை அடைவதில் தாமதமானாலும் மனம் தளராமல் முன்னேற வேண்டும். தோல்வி அடைவதால் ஏற்படும் விரக்தியில் லட்சியத்தைக் கைவிடமாட்டேன் என்ற தீர்மானத்தோடு அடுத்தபடி நோக்கி நடப்பவர்களே சாதனையாளர்களாகின்றனர். ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னால் அணிவகுத்து நிற்பது பல தோல்விகள்தான். அந்த தோல்விகளை சுமந்து கொண்டே வெற்றியை நோக்கி நடந்தால்தான் லட்சியம் என்ற சுடரை கைப்பற்ற முடியும்.


எண்ணத்தில் உறுதி கொண்டு தோல்விகளை புறந்தள்ளி வெற்றிகளை குவித்து தங்கள் பள்ளியின் பெருமைக் கொடியை தோளில் சுமந்து வீராங்கனைகளாக வீறு நடை போடுகின்றனர் வல்லம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள். தஞ்சை அருகே வல்லத்தில் அமைந்துள்ளது அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் பாடத்தில் மட்டுமின்றி எறிபந்து போட்டி, பேச்சு, நடனம், கட்டுரை, ஓவியம், ஒட்டப்பந்தயம் என்று அனைத்திலும் அசத்தல் சாதனைகளை செய்து வருகின்றனர்.


சென்னம்பட்டியை சேர்ந்த இப்பள்ளி 12ம் வகுப்பு மாணவி பா.சுவேதா. இவரது தந்தை பாலன். விவசாயி. தாய் சசிகலா. அண்ணன் குணசீலன். மாணவி சுவேதா எறிபந்து போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார். இதே போல் வட்டார அளவிலான போட்டியில் ஈட்டி எறிதலில் 2ம் இடம்,  வட்டார அளவில் சமூக நாடகத்தில் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமையை சேர்த்து உள்ளார். இதேபோல் மாரத்தான் போட்டியிலும் பங்கேற்று சான்றிதழ் பெற்றுள்ளார். பள்ளி அளவில் நடந்த எறிபந்து போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார். 200 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் பள்ளி அளவில் முதலிடமும், வட்டு எறிதல் போட்டியில் வட்டார அளவில் முதலிடமும் பெற்றுள்ளார்.


இப்பள்ளி 11ம் வகுப்பு மாணவி யுவஸ்ரீ. தந்தை புண்ணியமூர்த்தி. டிரைவர் தாய் காயத்ரி. அண்ணன்கள் குஷேந்திர பிரசாத், ஜெயபிரசாத். மாணவி யுவஸ்ரீ பள்ளி வட்டார அளவில் நடந்த பேச்சுப்போட்டிகளில் சிறப்பு பரிசுகள் பெற்றுள்ளார். இதேபோல் யோகாவில் சிறப்பு பரிசு, தனிநபர் நடிப்பில் வட்டார அளவில், மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். பரதநாட்டியத்தில் மாவட்ட அளவில் 2ம் இடம், வட்டார அளவில் நடந்த போட்டிகளில் எறிபந்து போட்டியில் 2ம் இடம், ஈட்டி எறிதலில் வட்டார அளவில் 2ம் இடம், பிறவகை நடனத்தில் வட்டார அளவில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார். வட்டார அளவிலான போட்டிகளில் கட்டுரை போட்டியில் 2ம் இடம், ஓவியப் போட்டியில் பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளார். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இம்மாணவி வட்டாரஅளவில் முதலிடம் பெற்றுள்ளார். மாறுவேடம், பரதநாட்டியம் ஆகிய போட்டிகளிலும் வென்றுள்ளார்.
 
12ம் வகுப்பு மாணவி வைஷ்ணவி. தந்தை பாஸ்கர். உப்பு வியாபாரம் செய்து வருகிறார். தாய் சரஸ்வதி, தம்பி அஜய். இம்மாணவி கட்டுரை போட்டியில் வட்டார அளவில் முதலிடம், மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பரிசு கோப்பையை வாங்கியுள்ளார். இதேபோல் கபாடி போட்டியில் வட்டார அளவில் முதலிடம் பெற்றுள்ளார். அறிவியல் கண்காட்சி போட்டியில் பாரம்பரியமாக விவசாயம் செய்வோம் என்ற தலைப்பில் வட்டார அளவில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார்.


12ம் வகுப்பு மாணவி சுவேதா. தந்தை சீனிவாசன். கூலித்தொழிலாளி. தாய் ஜீஷா. தங்கை ஸ்ரேயா. இம்மாணவி மாவட்ட அளவில் நடந்த போட்டியில் மேற்கத்திய நடனத்தில் முதலிடம், வட்டார அளவில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார். இதேபோல் கலைத்திருவிழாவில் மேற்கத்திய நடனத்தில் மாவட்ட அளவில் 2ம் இடம், கிராமிய நடனத்தில் மாவட்ட அளவில் 3ம் இடமும் பெற்று சான்றிதழ்களை வாங்கியுள்ளார். கலைத்திருவிழா போட்டியில் மேற்கத்திய நடனத்தில் முதலிடம் பெற்றுள்ளார் வட்டார அளவில் நடந்த சதுரங்கப் போட்டியில் பங்கேற்று சான்றிதழ் பெற்றுள்ளார்.


இப்பள்ளி 6ம் வகுப்பு மாணவி தன்ஷிகா. தந்தை கௌரிநாதன். சுயதொழில் செய்து வருகிறார். தாய் ஜெயமணி. அண்ணன் சோமேஸ்வரன். இம்மாணவி கலை திருவிழா பேச்சு போட்டியில் வட்டார அளவில் 2ம் இடம் பெற்றுள்ளார். திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார். திருக்குறள் நறுமுகை விருது மற்றும் சான்றிதழ்கள் பெற்றுள்ளார். சிலம்பம் போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம், வட்டார அளவில் 3ம் இடம் பெற்று விருது மற்றும் சான்றிதழ்களை தனதாக்கி கொண்டுள்ளார். இப்பள்ளி மாணவிகளின் சாதனைகள் பார்த்தால் கரையான்கள் அரித்து விட நீ என்ன காகிதமா. வெள்ளமே வந்தாலும் வீழ்த்த முடியாத நாணல்கள் அல்லவா என்று கூறத் தோன்றுகிறது.