தஞ்சாவூரில் ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமைகளில் என்ன நடக்கிறது தெரியுங்களா?
கலாச்சார சுற்றுலா ஒவ்வொரு ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமையும் காலை 7 மணிக்கு பெரிய கோயிலில் தொடங்கும், இந்த தமிழர் பாரம்பரியத்தின் முக்கிய இடங்களை சுற்றி இரவு 7 மணிக்கு மீண்டும் பெரிய யிலில் நிறைவு பெறும்.

தஞ்சாவூர்: பாரம்பரிய கலாச்சார சுற்றுலா போகலாமா... ஆமாங்க. ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சுற்றுலா நடைபெறுகிறது. என்னன்னு தெரியுங்களா?
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பா. பிரியங்கா பங்கஜம் வழிகாட்டுதலில், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் கலாச்சார சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலாச்சார சுற்றுலா ஒவ்வொரு ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமையும் காலை 7 மணிக்கு பெரிய கோயிலில் தொடங்கும், இந்த தமிழர் பாரம்பரியத்தின் முக்கிய இடங்களை சுற்றி இரவு 7 மணிக்கு மீண்டும் பெரிய கோயிலில் நிறைவு பெறும்.
இதில் தேவாரம், கல்வெட்டுகள் (பெரிய கோயில்), பரதநாட்டியம் (தஞ்சை நால்வர் இல்லம்), கர்நாடக இசை (திருவையாறு), வாத்திய இசை (உமையாள்புரம்), நாம சங்கீர்த்தனம் (கோவிந்தபுரம்), ஓவியம் & சிற்பம் (கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி), பாகவத மேளா (மெலட்டூர்), தெருக்கூத்து (ஆர்சுத்திப்பட்டு), பாரம்பரிய & சமகால கலைகள் (தென்னகப் பண்பாட்டு மையம்) மற்றும் நாட்டுப்புற கலைகள் (ரெட்டிபாளையம்) ஆகியவற்றை பார்வையிடலாம்.
சென்னை பிரஸ்தாரா அமைப்பின் நிறுவனர் கலாச்சார ஆர்வலர் ஜெயக்குமார் வழிகாட்டுதலுடன், தமிழர் கலாச்சார சிறப்புகளை நேரில் அனுபவிக்க இது ஒரு அரிய வாய்ப்பாக அமையும். இச்சுற்றுலா ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும். இதற்கு கட்டணமாக குளிர்சாதன வாகனம், காலை மதிய உணவு உட்பட ரூபாய் 1500/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை சோழப் பேரரசு வட்ட சுற்றுலா, இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கைவினைப் பொருட்கள் சுற்றுலா, மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை வேளாண் சுற்றுலா, நான்காவது ஞாயிற்றுக்கிழமை பொன்னியின் செல்வன் சுற்றுலா ஆகியவையும் நடைபெற்று வருகிறது.
இச்சுற்றுலாவில் பங்கேற்க விரும்புவோர் https://thanjavurtourism.org/registration/ என்ற இணைய முகவரி மூலமாகவோ 9489129765 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலமாகவோ முன்பதிவு செய்து பங்கேற்கலாம். தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமத்தின் சார்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுற்றுலாக்கள் தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு சிறப்புகளையும், பெருமைகளையும் அந்தந்த இடங்களுக்கே நேரடியாக சென்று பார்த்து அறிந்து கொள்ள சிறப்பான வாய்ப்பாக அமைந்துள்ளது.
இந்த சேவையை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கேட்டுக் கொண்டுள்ளனர். இச்சுற்றுலாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர் மற்றும் தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் முத்துக்குமார் ஆகியோர் செய்து வருகின்றனர். தஞ்சையின் பாரம்பரிய இந்த சுற்றுலாவில் நீங்களும் பங்கேற்று பயன் அடையுங்கள்.