தஞ்சாவூர்: தஞ்சை தொல்காப்பியர் சதுக்கத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் ரவுண்டானா
தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏராளமான வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகிறது. அந்த வகையில் தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் கடந்த மாதம் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வந்தது. இந்த பகுதி வழியாகத் தான் நாகை, திருவாரூர், வேளாங்கண்ணி, அம்மாப்பேட்டை மார்க்கமாக செல்லும் பஸ்கள் சென்று வருகின்றன. பயணிகள் பேருந்துகள் மட்டுமின்றி வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து மேற்கண்ட பகுதிகளில் உள்ள கோயில்கள், சுற்றுலாத்தலங்களுக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகளின் பஸ்கள், வேன்கள், கார்கள் என்று இந்த பகுதியை கடந்து செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் இருக்கும்.
போக்குவரத்து எப்போதும் நிறைந்த பகுதி
இதனால் இந்த பகுதியில் எப்போதும் போக்குவரத்து நிறைந்து இருக்கும். மேலும் திருமண மண்டபங்கள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனை, பூச்சந்தை என்று நிறைந்துள்ளதால் இப்பகுதியில் அதிகாலை முதலே வாகன போக்குவரத்து அதிகளவில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் திருவாரூர், நாகை உட்பட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் ஒரு நிறுத்தத்திலும், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி வேதாரண்யம் மார்க்கமாக செல்பவர்கள் மற்றொரு பஸ் நிறுத்தத்திலும் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். இது தவிர பழைய பஸ் நிலையம், ரயிலடி, புதிய பஸ் நிலையம் செல்பவர்கள் மறுபுறம் பஸ் நிறுத்தத்திலும் நின்று பஸ் ஏறி செல்கின்றனர்.
பயணிகள் நிழற்குடை இல்லைங்க
எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகம் உள்ள தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் 3 பஸ் நிறுத்தங்களிலும் பயணிகள் நிழற்குடை கிடையாது. மேலும் அப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட போது தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த பயணிகள் நிழற்குடையையும் சேர்த்து அதிகாரிகள் அகற்றி விட்டனர். இதனால் அப்பகுதியில் நிழற்குடை அமைக்கப்படாததால் பயணிகள், பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். கொளுத்தும் வெயில், கொட்டும் மழை என்று பயணிகள் நிழலுக்காகவும், மழையில் நனையாமல் இருப்பதற்காகவும் அருகில் உள்ள கடைகளில் ஒதுங்குகின்றனர்.
வெயில், மழைக்கு கடைகளில் தஞ்சம் புகும் நிலை
வியாபாரிகள் அவர்களை திட்டி விரட்டுவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. வியாபார நேரத்தில் வெளியில் போய் நில்லுங்கள் என்று கடை வைத்துள்ளவர்கள் விரட்டுகின்றனர். மேலும் குழந்தைகளுடன் வரும் பெண்களின் நிலை பற்றி கூறவேண்டாம். மிகுந்த வேதனைக்கும், சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இந்த பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும். இதனால் பெண்கள் சிரமமின்றி பஸ்சிற்கு காத்திருந்து குழந்தைகளுடன் செல்ல முடியும். எனவே இனியும் கால தாமதம் செய்யாமல் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 பஸ் நிறுத்தங்கள் இருக்கு... பயணிகள் நிழற்குடை?
இது குறித்து சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறியதாவது: தொல்காப்பியர் சதுக்கம் பகுதியில் 3 பஸ் நிறுத்தங்கள் உள்ளன. ஆனால் எந்த பஸ் நிறுத்தத்திலும் நிழற்குடைகள் இல்லை. இந்த பகுதியில் பள்ளிக்கூடங்கள் உள்ளதால் பள்ளி மாணவ,மாணவிகள், பயணிகள், பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். தற்போது வெயில் கோடை காலத்தை போல சுட்டெரித்து வருவதால் பொதுமக்கள் நிற்கமுடியாமல் அருகில் உள்ள கடைகளின் ஓரத்தில் இருக்கும் நிழலில் தஞ்சம் அடைகின்றனர்.
மழை பெய்தால் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் பஸ் ஏறும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற்குடைகள் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.